பக்கம் எண் :

பக்கம் எண்:1089

உரை
 
5. நரவாண காண்டம்
 
9. மதனமஞ்சிகை பிரிவு
 
          வலியும் வளமையு.....க்கு.. யும்
          பொலிவும் புகழும் பொருந்திய சிறப்பிற்
    85    குவம மாகு முதயண னொருமகன்
          அவமில் சூழ்ச்சி யாய்தா ரண்ணலும்
          ஆணு முட்கு மச்சமும் பயிர்ப்பும்
          பேணுங் கோலமும் பெருந்தகைக் கற்பும்
          வாணுதன் மகளிர் மற்றுப்பிறர்க் கின்றித்
    90    தானே வவ்விய தவளையங் கிண்கிணி
          மானேர் நோக்கின் மதனமஞ் சிகையும்
          ஆனாக் காதலோ டமர்ந்துவிளை யாடிக்
          காமர் பள்ளியுட் கட்டளை பிழையாத்
          தாமரை நெடுங்கண் டந்தொழி றொடங்கப்
    95    பள்ளி கொண்ட பொழுதிற் பையென
 
                  (இதுவுமது)
           83 - 95 : வலியும்.............பொழுதில்
 
(பொழிப்புரை) வலிமையும் அழகும்......க்கு......யும் பொலிவுடைமையும் புகழுடைமையும் ஒருவன்பால் பொருந்திய சிறப்பினுக்கு உவமையாகின்ற பெருமையினையுடைய உதயண மன்னனுடைய ஒரே மகனாகிய கெடாத சூழ்ச்சியையுடைய அழகிய மாலையணிந்த நரவாணதத்தனும் அன்பும், நாணமும், அச்சமும், பயிர்ப்பும் மகளிர் போற்றிக் கொள்ளுகின்ற அழகும் பெருந்தகைமையுடைய கற்புப் பண்பும் உலகின்கண் ஒளிபடைத்த நுதலையுடைய பிறமகளிர்பால் இல்லாமல் அனைத்தையும் தானே கவர்ந்து கொண்டவளும் அழகிய தவளைவாய்க் கிண்கிணியையுடையவளும் மான் நோக்குப் போன்ற நோக்கினையுடையவளும் ஆகிய மதனமஞ்சிகையும் ஒழியாத காதலோடு ஒருவரையொருவர் விரும்பி அழகிய பள்ளியிடத்தே விளையாடித் தமக்கிட்ட கட்டளையினின்றும் தவறாத தாமரைமலர் போன்ற நெடிய கண்கள் தமக்குரிய தொழிலாகிய துயிலுதலைத் தொடங்கா நிற்றலால், அவ்விருவரும் துயிலில் ஆழ்ந்த பொழுதில் என்க.
 
(விளக்கம்) வலிமுதலிய பண்புகள் ஒருவன்பால் பொருந்தி இருப்பதற்கு உதயணன் ஒருவனே உலகில் எடுத்துக்காட்டாவான் என்றபடி. அண்ணல் : நரவாணதத்தன். ஆண் - ஆணம் : விகாரம், அன்பு என்க. உட்கு - நாணம். வவ்விய - கவர்ந்து கொண்ட. நாணம் முதலிய பெண்மைப் பண்புக்கும் அழகிற்கும் கற்பிற்கும் தான் ஒருத்தியே எடுத்துக் காட்டாக அமைந்தவள் என்றவாறு. அமர்ந்து - விரும்பி, காமர் அழகு. கட்டளை - அறிவினாலே இதனை நோக்கற்க என்று இடப்பட்ட கட்டளை என்க. இனி, கண்களுக்கமைந்த இலக்கண முறையுமாம். தந்தொழில் என்றது உறக்கத்தை.