உரை |
|
3. மகத காண்டம் |
|
7. கண்ணுறு கலக்கம் |
|
45 பவழமு மணியும் பாங்குபட
விரீஇத்
திகழ்கதிர்ப் பசும்பொற் சித்திரச்
செய்கை
வனப்பமை வையந் தனக்குமறை யாகிய
கஞ்சிகை கடுவளி யெடுப்ப
மஞ்சிடை வானர
மகளிரிற் றானணி சுடர 50 முகைநலக்
காந்தண் முகிழ்விர னோவத்
தகைமலர்ப் பொய்கைத் தண்செங் கழுநீர்
சில்லெனப் பிடித்து மெல்லென
விழிந்து நண்ண
வருவோள் போலு மென்கண்
ஆற்றே னவட னஞ்சாந் திளமுலை 55
நோற்றே யாயினு நுகர்வல் யானெனத்
|
|
(இதுவுமது) 45 - 55;
பவழமும்...........யானென
|
|
(பொழிப்புரை) பவழமும் பிற
மணிகளும் அழகுண்டாக விரித்துத் திகழாநின்ற ஒளியையுடைய பசும்பொன்னாலே
சித்திரச்செயல் செய்து அழகோடு அமைந்த வண்டியிலே தனக்கு மறைப்பாக
இட்ட திரைச்சீலையைக் கடுங்காற்று விலக்கிய பொழுது வெள்ளை
முகிலினூடே தோன்றும் தேவமகள்போன்று அணிகலன்கள் ஒளிவீசாநிற்பக்
காந்தளரும்பு போன்ற அழகுடைய தனது கூப்பிய விரல் வருந்தும்படி அழகிய
மலரையுடைய பொய்கையிற் றோன்றிய குளிர்ந்த செங்கழுநீர் மலர் ஒன்றனைக்
காண்போர் மெய் சில்லென்று மயிர்க்கூச்செறியும்படி பற்றிக் கொண்டு
மெல்லென இறங்கி என்பால் அடைதற்கு வருவாள் போன்று என் மனக்கண்ணிலே
தோன்றுகின்றாள்! ஆதலாலே யான் ஆற்றுகின்றிலேன்! அப் பதுமாபதியின்
சந்தனம் நீவிய அழகிய இளமையுடைய முலைகளை யான் தவஞ்செய்தாயினும்
நுகர்வேன் என்று கூறி என்க.
|
|
(விளக்கம்) உதயணன்
முதன்முதலாகப் பதுமாபதியைக் கண்ட காட்சி, தன் மனக்கண்ணிலே நன்கு
பதிந்து கிடத்தலாலே அக் காட்சியையே மீண்டும் மீண்டும் கண்டு
வருந்துகின்றான். பாங்கு - அழகு. விரீஇ - விரித்து. தனக்கு-பதுமாபதிக்கு.
மஞ்சிடை - முகிலினூடே. வான் அரமகளிரில் - தேவமகளிர் போல.
காந்தண்முகை நலவிரல் என்க. முகை-அரும்பு. சில்லென-சில்லென்று
மயிர்க்கூச் செறியும்படி என்க. என்கண் நண்ணவருவோள் போல்கின்றாள்.
ஆனால் நண்ணுகின்றிலள். அதனால் யான் ஆற்றேன்
என்றவாறு. ''வேண்டிய வேண்டியாங்
கெய்தலாற் செய்தவ மீண்டு முயலப்
படும்''
((குறள் 265) என்பதுபற்றி ''யான் நோற்றேயாயினும் நுகர்வல்''
என்றான்)
|