பக்கம் எண் :

பக்கம் எண்:1090

உரை
 
5. நரவாண காண்டம்
 
9. மதனமஞ்சிகை பிரிவு
 
         
    95    பள்ளி கொண்ட பொழுதிற் பையென
          ஒள்வினை மாட முள்குவன னாகி
          விச்சை மறைவி னச்சமொன் றின்றி
          இகன்மிகு குமரனைத் துயின்மிசைப் பெருக்கிக்
          கயன்மிகு கண்ணியைக் கவவுப்பிணி நீக்கிப்
    100    புகலு முள்ளமோ டகலத் தடக்கி
 
        (மானசவேகன் மதனமஞ்சிகையை எடுத்துச் செல்லல்)
                95 - 100 : பையென............அடக்கி
 
(பொழிப்புரை) அம்மானசவேகன் ஒள்ளிய தொழிற் சிறப்பினையுடைய அப்பள்ளி மாடத்தின்கண் நுழைந்து தனது மந்திரத்தால் தன் உருக்கரந்து ஒரு சிறிதும் அச்சமின்றி வலிமைமிக்க நரவாணதத்தனை அவன் மேற்கொண்டிருக்கும் உறக்கத்தைத் தன் மந்திரத்தாற் பின்னும் பெருக்கிக் கயல் மீன் போன்ற மதனமஞ்சிகையை அவன் தன் மார்பகத்திட்டுக் கைகளால் தழுவியிருக்கும் பிணிப்பினை யகற்றிப் பெரிதும் விரும்புகின்ற நெஞ்சத்தோடே அவளை எடுத்துத் தன் மார்போடு அணைத்துக் கொண்டு என்க.
 
(விளக்கம்) முள்குதல் - அழுந்துதல். ஈண்டு நுழைதல் என்னும் பொருள் குறித்து நின்றது. மாடத்தில் அழுந்துதலாவது நுழைதல் என்க. விச்சை - உருக்கரக்கும் மந்திரம். அம் மந்திரத்தின் மறைவில் என்க. இகல் - ஈண்டு வலிமை. துயிலை மேலே பெருக்கி என்க. கயலினும் மிக்க அழகுடைய கன்னி என்க கவவுப்பிணி - அகத்திட்டுத் தழுவியிருக்கும் நிலை. நரவாணதத்தன் கவவுப் பிணியை நீக்கி என்க. புகலும் - விரும்பும். அகலம் - மார்பு.