பக்கம் எண் :

பக்கம் எண்:11

உரை
 
3. மகத காண்டம்
 
1. யாத்திரை போகியது
 
         
     75    உட்குடை விச்சை யொன்றுண் டதனைக்
           கற்றுநனி நவின்ற கடனறி யந்தணன்
           இருந்தினி துறையு மிராச கிரியெனும்
           பொருந்தரு வியனகர்ப் புக்கவற் குறுகி
           ஆற்றுளி வழிபா டாற்றி யமைச்சனொடு
     80    பூக்குழை மாதரை மீட்டனங் கொண்டு
           பெறற்கரு விச்சையுங் கற்று நாமெனத்
           திறற்படு கிளவி தெரிந்தவ னுரைப்ப
 
               (இதுவுமது)
           75 - 82 ; அதனை............உரைப்ப
 
(பொழிப்புரை) ''அவ்வரிய பெரிய வித்தையினை நன்கு
  பயின்று நன்கு செய்து பழகியவனும் தன் கடமையை நன்கு
  அறிபவனும், அந்தணனும் ஆகிய முனிவன் இருந்து இனிதாக
  வாழ்கின்ற 'இராசகிரியம்' என்னும் ஒப்பற்ற அகன்ற நகரத்தே
  நாம் சென்று அம்முனிவனை அணுகி முறைப்படி வழிபாடு
  செய்து இறந்தொழிந்த யூகியையும், பொலிவுடைய
  குழையணிந்த கோப்பெருந்தேவியாகிய வாசவதத்தையையும்
  மீட்டும் வரவழைத்துக் கோடலோடு, பெறுதற்கரிய அந்த
  வித்தையையும் நாம் அவன் பாலே கற்றுயர்வோம்,'' என்று
  ஆற்றலுடைய இம்மொழியினை அவ்விசைச்சன் செவ்வி தெரிந்து
  கூறா நிற்றலாலே என்க. 
 
(விளக்கம்) நவிலுதல் செய்து பழகுதல், கடன்-தன்னை
  எய்தியவர்க்கு ஆவன செய்யும் கட்டுப்பாடு, பொருந்து - ஒப்பு.
  ஆற்றுளி - முறைப்படி. அமைச்சன் - யூகி. மாதர்-வாசவதத்தை.
  கற்றும் - தன்மைப் பன்மை வினை முற்று. திறல்-கேட்போரைப்
  பிணிக்கும் ஆற்றல். செவ்வி தெரிந்து என்க. அவன் -இசைச்சன்,