பக்கம் எண் :

பக்கம் எண்:110

உரை
 
3. மகத காண்டம்
 
7. கண்ணுறு கலக்கம்
 
           தெய்வ நல்யாழ் கையமைத் தியற்றிய
           ஐதேந் தல்கு லவந்திகை வீவும்
           உறுதுணைத் தோழ னிறுதியு நினையான்
           மாண்ட சூழ்ச்சி மந்திர வமைச்சர்
     60    வேண்டுங் கொள்கைய னாகி நீண்ட
           தடம்பெருங் கண்ணி தகைபா ராட்டி
           உறுவகை யண்ண றறுகண் பொருந்தலும்
 
                    (இதுவுமது)
          56 - 62 : தெய்வ,,,,,.,,,,,,பொருந்தலும
 
(பொழிப்புரை) பதுமாபதியின் திறத்திலே இவ்வாறு புலம்பிய
  உதயண குமரன் மெல்லிதாய் உயர்ந்த அல்குலையுடைய
  வாசவதத்தை இறந்தமையையும் தனக்கு உற்ற துணைவனாகிய
  யூகியந்தணன் இறந்தொழிந்தமையையும் ஒரு சிறிதும் நினையாத
  வனாய்ச் சிறந்த ஆராய்ச்சியை யுடைய சூழ்ச்சித்திறமுடைய
  அமைச்சராகிய உருமண்ணுவா முதலியோர் துயின்றருள்க!
  என்று தன்னை வேண்டாநிற்றலை மேற்கொள்வானாய்த் தன்னெஞ்
  சினுள்ளே நீண்ட பெரிய கண்களையுடைய பதுமாபதியையே
  பாராட்டிக் கிடந்து அவ்வண்ணல் துயில் வரும் வகையாலேயே
 
(விளக்கம்) அவந்திகை-அவந்தி நாட்டினள்; வாசவதத்தை.
  வீவு - சாவு .தோழன் - யூகி. மந்திரச் சூழ்ச்சி என்க. அமைச்சர் -
  உருமண்ணுவா முதலியோர். வேண்டுங்கொள்கையை மேற்கொண்ட
  வனாய் என்க அண்ணல்-உதயணன்.