உரை |
|
3. மகத காண்டம் |
|
7. கண்ணுறு கலக்கம் |
|
கைவயிற்
கொண்ட கழுநீர் நறும்போது
கொய்மலர்க் கண்ணி கொடுப்போள்
போலக் 65 கனவிற் றோன்றக் கண்படை
யின்றி நனவிற்
றோன்றிய நறுநுதற் சீறடி
மைவளர் கண்ணியை யெய்தும்
வாயில் யாதுகொ
லென்றுதன் னகத்தே நினைஇ
வெங்கனன் மீமிசை வைத்த வெண்ணெயின் 70
நெஞ்ச முருக நிறுத்த லாற்றான்,
காவினுட் காவலன் கலங்கக் கோயிலுட்
|
|
(இதுவுமது) 63 - 71
; கைவயிற்............கலங்க
|
|
(பொழிப்புரை) கையின்கண்
பற்றிய நறிய செங்கழுநீர் மலரோடு கொய்து தொடுத்த மலர் மாலையை அணிந்த
கோலத்தோடு அப்பதுமாபதி தோன்றி அச்செங்கழுநீர் மலரைத்
தனக்குக் கொடுப்பவள்போன்று கனவிலே தோன்றாநிற்றலாலே . துயில் கலைந்து
விழிப்புற்று நனவிலே காமன் கோயிலிலே தோன்றிய நறிய நுதலையும் சிறிய
அடி களையும் மைதீட்டப்பட்ட நெடிய கண்களையும் உடைய
அப்பதுமாபதியை அடைதற்குரிய வழிதான் யாது? என்று தன்னெஞ்சத்தே நினைந்து
நினைந்து பார்த்து வெவ்விய தீயின்மேல் வைக்கப்பட்ட வெண்ணெய் போன்று
நெஞ்சம் உருக அவள்பாற் செல்லும் அந்நெஞ்சத்தை நிறுத்தமாட்டா
தவனாய்த்தான் உறையும் அப்பூம்பொழிலிலேயே உலகங்
காவலனாகிய அவன் கலங்காநிற்ப வென்க.
|
|
(விளக்கம்) கொய்மலர் ;
வினைத்தொகை. தோன்றுதலாலே கண்படை கலைந்து என்க. கண்படை-உறக்கம்.
நனவிற்றோன்றிய என்பதற்கு நனவுபோலத் தோன்றிய எனினுமாம். கண்ணி -
கண்ணையுடையோள்-வாசவதத்தை. வாயில்-வழி, நினைஇ -
நினைந்து. காவலன் - உதயணன்.
|