பக்கம் எண் :

பக்கம் எண்:113

உரை
 
3. மகத காண்டம்
 
7. கண்ணுறு கலக்கம்
 
           நறுமலர்க் காவினுட் டுறுமிய பூந்துணர்க்
           கொடிக்குருக் கத்திக் கொழுந்தளிர் பிடித்து
           நாண்மலர்ப் பின்னைத் தாண்முத லணைந்து
     80    பருகு வன்ன நோக்கமொடு பையாந்
           துருகு முள்ளமோ டொருமர னொடுங்கி
           நின்றோன் போலவு மென்றோள் பற்றி
           அகலத் தொடுக்கி நுகர்வோன் போலவும்
           அரிமலர் நெடுங்க ணகவயிற் போகாப்
     85    புரிநூன் மார்பன் புண்ணிய நறுந்தோள்
           தீண்டும் வாயில் யாதுகொ லென்றுதன்
           மாண்ட குழ்ச்சி மனத்தே மறுகி
           ஆசி லணியிழை தீயயல் வைத்த
           மெழுகுசெய் பாவையி னுருகு நெஞ்சினள்
     90    பள்ளி கொள்ளா ளுள்ளுபு வதிய
 
                 (இதுவுமது)
          77 -90 ; நறுமலர்...............வதிய
 
(பொழிப்புரை) நறிய பூம்பொழிலின்கண் செறிந்த பூங்கொத்துக்
  களையுடைய கொடியாகிய குருக்கத்தியின் வளவிய தளிரைக்
  கையிற்பற்றி அன்றலர்ந்த மலர்களையுடைய புன்னை மரத்தின்
  அடிப்பகுதியைச் சேர நின்று தன்னை வாரிப் பருகுவான்
  போன்ற நோக்கத்தோடே துன்புற்று உருகுகின்ற நெஞ்சத்தோடு
  ஒரு மரத்தின்கண் மறைந்து நிற்போன்போலவும் தன்பால் வந்து
  தனது மெல்லிய தோளைப்பற்றி , அவனுடைய மார்பிலே
  தன்னையணைத்து இன்பம் நுகர்வோன் போலவும், தனது
  செவ்வரி பரந்த மலர் போன்ற நெடிய கண்களினூடே நீங்காமல்
  நிலைபெற்ற முப்புரி நூலணிந்த மார்பையுடைய. அப்பார்ப்பன
  மகனுடைய புண்ணியமுடைய நறிய தோள்களைத் தழுவுவதற்குரிய
  வழி தான் யாது? என்று ஆராய்கின்ற தனது, மாட்சிமையுடைய
  சூழ்ச்சியையுடைய மனத்திலே சுழற்சியடைந்து குற்றமற்ற அழகிய
  அணிகலன்களையுடைய அந்நங்கை தீயின் பக்கத்தே வைக்கப்பட்ட
  மெழுகாலியன்ற பாவைபோல உருகாநின்ற நெஞ்சினையுடையவளாய்த்
  துயிலாமல் அப்பார்ப்பன மகனையே இடையறாது நினைந்து கிடப்ப
  என்க.
 
(விளக்கம்) ஈண்டுப், பதுமாபதி உதயணனைக் .காமன்கோயில்
  மருங்கே முதன் முதலாகக் கண்ட அக்காட்சியே தன் னெஞ்சத்தே
  பதிந்து அகலாமல் நிலைபெறுதலின் அக்காட்சியையே மீண்டும்
  மீண்டும் நினைந்து வருந்துகின்றாள் என்றபடியாம்.
     துறுமிய - செறிந்த. துணர் - கொத்து. நாண்மலர் - அன்றலர்ந்த
  மலர். மென்றோள் - இடக்கரடக்கல்- அழகுடைமைக்கும் மேலைப்
  புண்ணியமே காரணமாகலின் புண்ணிய நறுந்தோள் என்றாள். மெழுகு
  செய்ாவை-மெழுகாற் செய்த பாவை. பள்ளி கொள்ளாள் - துயிலாமல்,
  உள்ளுபு - நினைந்து.