பக்கம் எண் :

பக்கம் எண்:126

உரை
 
3. மகத காண்டம்
 
8. பாங்கர்க் குரைத்த
 
         
     
           நின்ற செவ்வியு ளொன்றா ரட்ட
           வாமான் றிண்டேர் வத்தவர் பெருமகன்
           கோமாட் கோடிய குறிப்பின னாகித்
     60    திகழ்தரு மதியிற் றிருமெய் தழீஇ
           வெள்ளைச் சாந்தின் வள்ளி யெழுதிய
           வயந்தக குமரன் வரைபுரை யகலத்
           தசைந்த தோள னாகி யொருகையுட்
           டாரகம் புதைத்த தண்மலர் நறும்பைந்
     65    தூழறிந் துருட்டா வொருசிறை நின்றுழிப்
           பந்தவன் செங்கை பயில்வது நோக்கி
 
           இதுவுமது
    57 - 66: ஒன்றார்.........நோக்கி
 
(பொழிப்புரை) பகைவரைக் கொன்ற வெற்றியையுடைய
  தாவும் குதிரைகள். பூட்டிய தேரை யுடையவனாகிய வத்தவ மன்னன்
  உதயணன் அற்றை நாளும் இறைமகளாகிய பதுமாபதியின்பாற் சென்ற
  கருத்தையுடையவனாகி விளங்குகின்ற திங்கள் போன்ற தனது அழகிய
  உடலின்கண் மங்கலான வெண்சந்தனத்தாலே கொடியுருவம் எழுதப்பட்ட
  வயந்தக குமரனுடைய மலை போன்ற மார்பின்கண்வைத்த ஒரு கையை
  யுடையவனாய் மற்றொரு கையாலே மலர்மாலையாற் பொதியப்பட்ட
  குளிர்ந்த மலரானியன்ற நறிய பந்தினை முறையறிந்துருட்டிக் கொண்டு
  ஒரு பக்கத்தே நின்றானாக; அப்பொழுது அப்பெருமகன் சிவந்த
  கைப்பந்துருட்டுதலை நோக்கி என்க
 
(விளக்கம்) ஒன்றார் - பகைவர், அட்ட - கொன்ற,
  வாமான் - தாவுங்  குதிரைகள் கோமகள் - தலைவியாகிய
  பதுமாபதி. வள்ளி - கொடி. வரை புரை - மலையையொத்த.
  அசைந்த - தங்கிய; வைத்த. தாரகம் - மாலையுள்.
  பைந்து - பந்து. ஊழ் - உருட்டுமுறை. சிறை - பக்கம்.