பக்கம் எண் :

பக்கம் எண்:13

உரை
 
3. மகத காண்டம்
 
1. யாத்திரை போகியது
 
            இன்னே போது மேகுமின் விரைந்தெனப்
           பள்ளம் படரும் பன்னீர் போலவன்
    90     உள்ளம் படர்வழி யுவப்பக் காட்டிக்
           கணம்புரி பெரும்படைக் காவ னீக்கிக்
           குணம்புரி தோழர் கொண்டனர் போதர
           ஆற்றலும் விச்சையு மறிவு மமைந்தோர்
           நூற்றுவர் முற்றி வேற்றுந ராகென
 
                 (இதுவுமது)
         88 - 94 ; இன்னே..................வேற்றுநராகென
 
(பொழிப்புரை) அது கேட்ட உதயணன்?அங்ஙனமாயின்
  இப்பொழுதே அவ்விராசகிரிய நகரத்திற்குச் செல்வோம். விரைந்து
  புறப்படுங்கோள்!' என்று கூறா நிற்ப, இவ்வாறு பள்ளங் கண்டுழிப்
  பாயும் வெள்ளம் போன்று அவன் நெஞ்சம் விரும்பி விரையா
  நின்ற அவ்வுயுபாயத்தைத் தலைக்கீடாகக் கொண்டு அவன்
  மகிழும்படி அவன் உவப்பனவற்றையெல்லாம் காட்டிக் கூட்டத்தைச்
  செய்கின்ற பெரிய படையினது காவலை அகற்றிவிட்டு நலமே -
  புரிகின்ற தோழர்கள் உ.தயணனை அழைத்துக்கொண்டு போதற்கு
  ஆற்றலும், போர்க்கலையும், நுண்ணறிவும் அமைந்த ஒரு நூறு
  மறவர் மட்டும், எம்மைச் சூழ்ந்து உள்வரிக்கோலம் கொள்க என்று
  பணித்தலானே என்க.
 
(விளக்கம்) இன்னே.- இப்பொழுதே. .விரைந்து ஏகுமின்
  என என்று மாற்றுக. பன்னீர் என்றது - வெள்ளத்தை. அவன் -
  உதயணன். கணம் - கூட்டம். கூட்டமான பெரும்படையோடு
  செல்வின் தம்மைப் பிறர் இன்னாரென அறிவராகலின் அப்படையை
  நீக்கீனர் என்பது கருத்து. குணம் - ஈண்டு நலத்தின் மேற்று.முற்றி -
  சூழ்ந்து. வேற்றுநர் - உள்வரிக்கோல முடையோர் வேற்றுநராதலும்,
  பிறர் தம்மை உணராமைக்கு என்க.