பக்கம் எண் :

பக்கம் எண்:132

உரை
 
3. மகத காண்டம்
 
8. பாங்கர்க் குரைத்த
 
         
     
     90    மந்திரச் சூழ்ச்சியுள் வெந்திறல் வீரன்
           வள்ளிதழ்க் கோதை வாசவ தத்தையை
           உள்வழி யுணரா துழலுமென் னெஞ்சினைப்
           பல்லிதழ்க் கோதைப் பதுமா பதியெனும்
           மெல்லியற் கோமகண் மெல்லென வாங்கித்
     95    தன்பால் வைத்துத் தானுந் தன்னுடைத்
           திண்பா னெஞ்சினைத் திரிதலொன் றின்றி
           என்னுழை நிறீஇத் திண்ணிதிற் கலந்த
           காம வேட்கைய டானெனக் கூற
 
          (உதயணன் கூற்று)
      90 - 98 : மந்திர,,,,,,,,,,,,,,,,கூற
 
(பொழிப்புரை) அவ்விடத்தினின்றும் தாபதப் பள்ளிக்குச்
  சென்று தன் தோழருடன் கூடிப் பல்வேறு பொருள் பற்றி
  ஆராய்ச்சி செய்திருந்தபொழுது வெவ்விய ஆற்றலுடைய
  வீரனாகிய உதயணகுமரன் அத்தோழரை நோக்கி 'நண்பரீர்!
  என் காதலியாகிய பெரிய இதழ்களையுடைய மலர் மாலையணிந்த
  வாசவதத்தை மாறிப் பிறந்திருக்கும் இடம் யாதென்று உணர
  மாட்டாமையாலே சுழலா நின்ற என் நெஞ்சத்தைப் பலவாகிய
  இதழ்களையுடைய மலர் மாலையணிந்தவளும் பதுமாபதி என்னும
  பெயரை யுடையவளும். ஆகிய மென்மைமிக்க சாயலையுடைய
  கோமகளொருத்தி மெல்ல என்னிடத்தினின்றும் கவர்ந்து
  தன்னிடத்தேயே வைத்துக்கொண்டதுமன்றித் தானும் தன்னுடைய
  திண்ணிய நெஞ்சினைப் பிறழாதபடி என்பால் நிறுத்தி உறுதியாக
  என்னோடு கலந்துவிட்ட காம வேட்கையை உடையவள் ஆயினள்
  கண்டீர்! என்று கூற வென்க.
 
(விளக்கம்) மந்திரச் சூழ்ச்சி - மறைவாகவிருந்து ஆராயும்
  ஆராய்ச்சி. வீரன்-உதயணன். உள்வழி - உள்ளுமிடத்தே
  எனினுமாம். திரிதல் - பிறழுதல். நிறீஇ - நிறுத்தி.