பக்கம் எண் :

பக்கம் எண்:138

உரை
 
3. மகத காண்டம்
 
8. பாங்கர்க் குரைத்த
 
         
           மலரினு மரும்பினுந் தளிரினும் வனைந்த
           சந்தக் கண்ணிதன் சிந்தை யறியப்
           பூக்குழை மாதர் நோக்கிடை நோக்கிப்
     130    படுகாற் பொய்கைப் பக்க நிவந்த
           நறுமலர்ப் பொதும்பர் நாற்றுவனம் போகி
           மறைந்தன மிருந்த காலைமற் றவளென்
           கண்ணி கொள்ளிற் கலக்கு முள்ளம்
           திண்ணி தாகுத றெளிமி னீரென
     135    மன்னவ னுரைத்தனன் மற்றவர்க் கெடுத்தென்
 
          (இதுவுமது)
      127 - 135 : மலரினும்............எடுத்தென்
 
(பொழிப்புரை) அம்மன்னவன் அவ்வமைச்சர்களை நோக்கித
  ' தோழர்காள், யாம் மலர்களானும் அரும்பானும் தளிரானும்
  கட்டப்பட்ட அழகுடைய மாலைகளைப் பொலிவுடைய
  குழையை உடைய அப் பதுமாபதி நம்மை நோக்கும்
  செவ்வியறிந்து அவள் காணும்படி படிக்கட்டுக்களையுடைய  
  அப்பொய்கையின் பக்கத்திலே உயர்ந்துள்ள நறிய
  பூம்பொழிலின்கண் தூங்கவிட்.டு அப்பாற் சென்று மறைந்து
  இருப்போமாக; அங்ஙனம் இருக்கும் பொழுது அப்பதுமாபதி
  யான் வைத்த மலர் மாலையை எடுத்துக்  கொள்வாளாயின்
  எங்கள் நெஞ்சம் இரண்டும் ஒன்றனோடு ஒன்று கலந்திருத்தல்
  உறுதியாகுதலை நீவிர் அறிந்துகொள்ளுங்கோள் ' என்று
  எடுத்துக் கூறுவானாயினான் என்க.
 
(விளக்கம்) சந்தம் - அழகு;. சந்தனமுமாம், கண்ணி - மாலை.
  பூ - பொலிவு; பூத்தொழிலுமாம். மாதர் - பதுமாபதி, நோக்கிடை
  நோக்கி - நோக்கும் செவ்வி யறிந்து. படுகால் - படிக்கட்டு.
  நிவந்த- உயர்ந்த. பொதும்பர்-பொழில். நாற்றுவனம்; முற்றெச்சம்;
  தூங்க விட்டு. மறைந்தனம்; முற்றெச்சம்; திண்ணிது - உறுதி
  மன்னவன்; உதயணன்,

             8. பாங்கர்க்குரைத்தது முற்றிற்று.
  -----------------------------------------------------------------------------