பக்கம் எண் :

பக்கம் எண்:14

உரை
 
3. மகத காண்டம்
 
1. யாத்திரை போகியது
 
         
     95    வெண்ணூற் பூந்துகில் வண்ணங் கொளீஇ
           நீலக் கட்டியு மரகதத் தகவையும்
           பாசிலைக் கட்டியும் பீதகப் பிண்டமும்
           கோல மாகக் கொண்டுகூட் டமைத்துப்
           பிடித்துருக் கொளீஇக் கொடித்திரி யோட்டிக்
     100    கையமைத் தியற்றிய கலிங்கத் துணியினர்
           கொய்யுளைப் புரவி மேற்கொண் டவரிற்
           கைவினைக் கம்மங் காண்பினி தாக
           வாரமைத் தியற்றிய காலமை செருப்பினர்
           செம்பொற் கொட்டைப் பந்தர்க் கொளுவினர்
     105    மாத்திரை நுண்கயிற் றாத்திரை யாப்பினர்
           உள்கூட் டமைந்த சில்கூட் டல்குலர்
 
             (உள்வரிக் கோலங் கோடல்)
           95 - 106 ; வெண்ணூல்............அல்குலர்
 
(பொழிப்புரை) வெள்ளிய நூலானியன்ற அழகிய துகிலின்
  கண்  வண்ண  மூட்டி நீனிறக்  கரையும்  மரகத நிற வுடலும்
  பச்சிலைக்கரையும்  பொன்னிற  உடலும் பல்வேறு கோலமாகக்
  கொண்டு  கொய்து கூட்டிப் பிடித்து உருவமைத்து ஊடே ஊடே
  பூங்கொடி  யுருவமுண்டாக  வண்ண  நூற்றிரிகளைப்  போக்கி
  ஒப்பனை செய்தமைத்த கலிங்கமாகிய ஆடைகளையுடுத்தோராய்க்
  கொய்து  மட்டஞ்  செய்த  பிடரி  மயிரையுடைய குதிரையிலே
  ஏறிச்செல்வோர்  போன்று  தங்கால்களிலே  கைத்தொழிற்றிறங்
  காண்டற்கினிதாக  வாரமைத்துச்  செய்த  தத்தம்  காலுக்குப்
  பொருந்திய  செருப்புகளை  அணிந்தோராய்ச்  செவ்விய
  பொன்னாலியன்ற  குமிழமைத்த  மராஅடியை  அணிந்தோராய்ப்
  பல்வேறு  மருந்துகளையும்  வைத்த  நுண்ணிய கயிற்றாலியன்ற
  உறியினையுடையோராய் யாத்திரை செல்வோர் உடுத்துக் கொள்ளும்
  முறைமையாலே அகத்தே பொருந்துதலமைந்த சிலவாகிய
  ஆடைக்கூட்டுகளை அசைத்த அல்குலையுடையவராய் என்க.
 
(விளக்கம்) கட்டி-கரை; விளிம்பு. கட்டியும் அகவையும்
  என்றது கரையும் உ.டலும் என்றவாறு. அகவை - உள்ளிடம்.
  பிண்டம் - உடல். பீதகம் -பொன். பிடித்து - உருக்கொளுவுதலும்
  திரியோட்டுதலும் நெய்தற்றொழில் வகையென்க. குதிரையிற்
  செல்வோர் அணியும் அழகான செருப்புப் போன்ற
  செருப்பினையுடையோராய் என்க, கொட்டைப் பந்தர் - குமிழ்
  வைத்த மராஅடி, மாத்திரை-மருந்து. அல்குல் - இடை, யாத்திரை
  செல்வோர் இடையிலே உடுத்த ஆடை  யின்றிப் பிற
  ஆடைகளையும் ஒன்று கூட்டிச் சுற்றிக் கொள்வராகலின் உள் கூட்டு
  அமைந்த சில் கூட்டு அல்குலர் என்றார், கூட்டு-ஒன்று கூட்டப்பட்ட
  ஆடை என்க.