பக்கம் எண் :

பக்கம் எண்:142

உரை
 
3. மகத காண்டம்
 
9. கண்ணி தடுமாறியது
 
           வள்ளி்தழ்க் கண்ணி வளம்பெறச் சூட
           அரும்பினும் போதினும் பெருந்தண் மலரினும்
           முறியினு மிலையினுஞ் செறியக் கட்டி
           ஒருங்குபுறம் புதைஇ யுதயண குமரனும்
     25    திருந்திழைத் தோளி விரும்புபு நோக்கச்
           சிதர்ழிறை வண்டின் செவ்வழி புணர்ந்த
           ததரிதழ் ஞாழற் றாழ்சினைத் தூக்கிப்
           பைந்தாட் பொருந்திச் செஞ்சாந் துதிரத்
           திருமலி யகலஞ் சேர முயங்கிப்
     30    பொருமுர ணண்ணலும் போந்த பொழுதின்
 
                   (இதுவுமது)
            21-30: வள்ளிதழ்,,,,,,,,,பொழுதின்
 
(பொழிப்புரை) பெரிய மலர் மாலையினையுடைய பதுமாபதி
  தன் அழகு மேலும் வளம் பெறும்பொருட்டு அணிந்துகொள்ளு
  தற்குச் சிற்றரும்புகளாலும் நாளரும்புகளாலும் பெரிய குளிர்ந்த
  மலர்களாலும் இளந் தளிர்களாலும் பச்சிலைகளாலும் நெருங்கக்
  கோதை புனைந்து அவ்வுதயண குமரன் இவற்றை யெல்லாம்
  ஒருங்கு சேர்த்துத் திருந்திய அணிகலன் அணிந்த தோள்களை
  யுடைய பதுமாபதி விரும்பி நோக்கும் செவ்வி தேர்ந்து சிதர்ந்த
  சிறகுகளை யுடைய வண்டுகளின் செவ்வழிப் பண் சேர்ந்த
  செறிந்த மலர்களையுடைய ஒரு ஞாழன் மரத்தினது தாழ்ந்த
  கிளையின்கண் தூங்கவிட்டு அம்மரத்தினது பசிய அடிப்பகுதியில்
  பொருந்துதலாலே பூசிப் புலர்ந்த செஞ்சந்தனம் உதிரும்படி
  செல்வம் மிகுதற்குக் காரணமான தன்னுடைய மார்போடு அம்
  மரத்தை அணைத்துத் தழுவி இறங்கிப் போராற்றல் மிக்க அவ்
  வுதயணன் சென்றபொழுது; என்க.
 
(விளக்கம்) அரும்பு - சிற்றரும்பு. போது-பேரரும்பு, முறி -
  தளிர், தோளி: பதுமாபதி. விரும்புபு - விரும்பி. சிதர் - சிதர்ந்த.
  செவ்வழி - ஒரு பண். ததர்- செறிவு. தாழ்சினை - தணிந்த மரக்கிளை.
  முரண் - வலி அண்ணல் ;  உதயணன்