உரை |
|
3. மகத காண்டம் |
|
9. கண்ணி தடுமாறியது |
|
செவிலித் தாயுந் தவ்வையு மாயமும்
அகலப் போகிய வமைய
நோக்கி 50 அன்னம் போல மென்மெல
வொதுங்கி
நன்முலைத் தீம்பா றம்மனை
கொடுப்ப
ஒருங்குண் டாடிய கருங்கண் மதிமுகத்
தந்த ணாட்டி யாப்பியா
யினியெனும் மந்திரத்
தோழியோடு மணங்கமழ் காவின் 55
அணித்தழை மகளி ரருங்கடிக் கமைந்த
மணிச்சுதைப் படுகான் மருங்கணி
பெற்ற
அளப்பருங் குட்டத் தாழ்ந்த
பொய்கைத்
தாட்கொ ளெல்லையுள் வாட்கண் சிவப்பக்
|
|
(இதுவுமது)
48 - 58 : செவிலி.........எல்லையுள்
|
|
(பொழிப்புரை) பின்னர்
அக்கோமகள் தன் செவிலித் தாயும் தமக்கைமாரும், தோழிமாரும் அகன்றுபோன
சமயம் பார்த்து. அன்னப்பறவை போல மெல்ல மெல்ல நடந்து
சென்று தன் நற்றாய் தனது முலைப்பாலை ஊட்டுதலாலே தன்னோடு ஒருங்கே உண்டு
தன்னோடு ஒருங்கே விளையாடிய கரிய கண்ணையும், திங்கள் மண்டிலம் போன்ற
முகத்தைமுயுடைய பார்ப்பனியாகிய யாப்பியாயினி என்னும் தன் உசாத் துணைத்
தோழியோடு கூடி நறுமணங் கமழா நின்ற பொழிலின் இடையே அழகிய
தழையாடை யுடுத்த இள மகளிர் ஆடுதற்கு ஏற்ற அரிய காவலொடு பொருந்திய
மணிகள் பதித்துச் சுதை தீற்றப்பட்ட படித்துறையினையுடைய அளத்தற்கரிய
ஆழத்தையுடைய பொய்கையின்கண் கால் நிலை கொள்ளும் அளவில் இறங்கி;
என்க.
|
|
(விளக்கம்) தவ்வை -
தமக்கை; என்றது தனக்கு மூத்த தோழிமாரை. ஒதுங்கி - நடந்து. தம்மனை -
தாய். அந்தணாட்டி - பார்ப்பினி; யாப்பியாயினி - பதுமாபதியின் உசாத்
துணைத் தோழியாகிய ஒரு பார்ப்பன. மகள் இவளுக்குப் பதுமாபதியின் தாய்
முலைப் பாலூட்டி வளர்ந்தனள் என்பதும் இவள் பதுமாபதியுடன்
ஒருங்கு உண்டு ஆடி வளர்த்தனள் என்பதும் இங்கே குறிப்பிடப் படுகின்றன.
மந்திரத் தோழி - உசாத் துணைத் தோழி. அருங்கடி - அரிய காவல். மணிச்
சுதை-மணி பதித்துத் தீற்றிய சுதை; அழகிய சுதையுமாம். படுகால்- படிக்கட்டு.
குட்டம்-ஆழம். தாள்கொள் எல்லை-கால் நிலை
கொள்ளுமிடம்.
|