பக்கம் எண் :

பக்கம் எண்:150

உரை
 
3. மகத காண்டம்
 
9. கண்ணி தடுமாறியது
 
            தன்னமர் தோழியும் பின்னமர்ந் தெய்தி
     95     நீயார் நங்கை நின்னே போலுமெம்
            சேயான் றங்கை செல்வப் பாவை
            மாயோ டன்னை மலர்த்தகைக் காவினுள்
            இன்னினிக் கெடுத்தே னன்னவள் கூறிய
            துன்னருந் தோட்டத்திற் றுளங்குவன ளாகி
     100     வேறுபட் டனளென விம்முவன ளிறைஞ்சிக்
            கூறாது நாணிய குறிப்புநனி நோக்கி
            நின்கட் கிடந்த நீரணி யேஎர்
            என்கண் கவற்றிற் றென்றலோ டியலித்
 
              (யாப்பியாயினி ஐயுற்று வினாதல்)
               94- 103;தன்னமர்...........................இயலி
 
(பொழிப்புரை) அவ்வழி, தன்னைப் பெரிதும் விரும்புமியல்புடைய
  தோழியாகிய யாப்பியாயினியும் விரும்பி வந்து அப்பதுமாபதியை
  அடைந்து நோக்கி ஐயுற்றாள் போன்று 'நங்காய் நீ யார்?.
  பெரும்பாலும் உருவத்தாலே நின்னையே ஒத்துள்ளவளும்
  எம்மரசன் தங்கையும் எங்கட்கெல்லாம் செல்வம் போன்றவளும்,
  பாவை போன்றவளும் மாமைநிறம் உடையோளும் ஆகிய என்
  தோழி ஒருத்தியை மலர்மிக்க அழகிய இப்பூம்பொழிலின்கண்
  இப்பொழுது காணாதவள் ஆயினேன், அத்தோழி என்னாற்
  கூறப்பட்ட கிட்டுதற்கரிய இத்தோட்டத்தின்கண் நடுங்குவாளாய் மனம்
  வேறுபட்டு என்னைப் பிரிந்து போயினள்'' என்று கூறாநிற்ப, அதுகேட்ட
  பதுமாபதி மனம் விம்மி முகம் கவிழ்ந்து யாதொன்றும் கூறாமலே
  நாணி நின்ற குறிப்பினைக் கூர்ந்து நோக்கி 'ஓ! நீ பதுமாபதியோ? நின்
  திருமேனியில் கிடந்த நின்னுடைய இந்நீரணிகலன்கள் என்னை
  மயக்கிவிட்டன காண்; ஆதலால் யான் கவலையுற்றேன்'. என்று கூறப்
  பின்னர் அத்தோழியோடு சென்று; என்க.
 
(விளக்கம்) இப்பகுதி அகப்பொருள் துறையின்கண் 'நாண
  நாட்டம்' என்னும் துறையை நினைவூட்டுதல் உணர்க. யாப்பியாயினி
  பதுமாபதியின் புத்தொளி கண்டு ஐயுற்றாள் போன்று வினவியபடி யாம்.
  சேயான் ; அரசன்; தருசகன். மாயோள் - மாமை நிறமுடையவள்.
  தகை - அழகு. இன்னினி -  இப்பொழுது. கெடுத்தேன் - காணப்ப
  டாமையால் அவளை இழந்தேன் என்றவாறு. அன்னவள் - அப்பதுமாபதி,
  இறைஞ்சி - கவிழ்ந்து, நீரணி யேஎர் - நீர் விளையாட்டுக்குரிய
  ஒப்பனை அழகு. கவற்றிற்று - கவலைப்படச் செய்தது. இயலி - சென்று.