பக்கம் எண் :

பக்கம் எண்:152

உரை
 
3. மகத காண்டம்
 
9. கண்ணி தடுமாறியது
 
         
     115    நீப்பருங் காத னிறைந்துட னாடல்
           பண்புடைத் தென்றத் தண்டழை யணிந்த
           காவி னத்த மேவின னாகித்
           தேர்வனன் றிரிவுழி வார்தளிர் பொதுளிய
           அருகுசிறை மருங்கி னொருமகள் வைத்த
     120    புதுமலர்ப் பிணையலும் புனைநறுஞ் சாந்தமும்
           கதிர்மணி யாழியுங் கண்டன னாகி
           வலிகெழு மொய்ம்பின் வயந்தக குமரன்
           ஒலிகெழு தானை யுதயணற் குய்ப்ப
 
        (பதுமாபதி வைத்த மாலை முதலியவற்றை வயந்தகன
்                         எடுத்து வந்து கொடுத்தல்)
                 115 - 123 ; நீப்பரும்............உய்ப்ப
 
(பொழிப்புரை) பிரிதற்கரிய காதற் பண்பினாலே நிறைவுற்று
  இக்காதலர் இருவரும் ஒழுகும் ஒழுக்கம் பெரிதும் பண்புடைய
  தொன்றாம் என்று மகிழ்ந்து வலிமை பொருந்திய ஆற்றலுடைய
  வயந்தக குமரன் என்பான் குளிர்ந்த தழைகளாலே அழகுற்ற
  அச்சோலையின் ஊடே அமைத்த நெறிகளில் நடந்து அங்கும்
  இங்கும் ஆராய்ந்து சுற்றித் திரியுங்கால் நெடிய தளிர் மிக்குள்ள
  அண்மையிலுள்ள ஓரிடத்தே ஒப்பற்ற அப்பதுமாபதி நங்கை       
  உதயணன் பொருட்டு வைத்துச் சென்ற புதிய மலர்மாலைகளையும்
  மணப் பொருள் கூட்டிச் செய்த நறிய சந்தனத்தையும் ஒளிமிக்க
  மணிகள் பதித்த மோதிரத்தையும் கண்டவனாய் மகிழ்ந்து
  அவையிற்றை எடுத்துக் கொணர்ந்து ஆரவாரம் பொருந்திய படை
  களையுடைய உதயண வேந்தன்பால் கொடா நிற்ப; என்க,
 
(விளக்கம்) இக்காதலர் இருவரும் காதலால் நிறைந்து
  ஒன்றுபட்டு ஒழுகும் ஒழுக்கம் பெரிதும் பண்பாடுடைத்து என்று
  வியந்து என்றவாறு. கா - பொழில், அத்தம் - வழி, ஒருமகள் ;
  ஒப்பற்ற பதுமாபதி. ஆழி - மோதிரம். மொய்ம்பு - ஆற்றல்.
  உய்ப்ப - கொடுப்ப.