உரை |
|
3. மகத காண்டம் |
|
9. கண்ணி தடுமாறியது |
|
வாங்கின
னுடுத்துப் பூந்தண் சாந்தம்
எழுவுறழ் தோளு மகலமு
மெழுதிப்
புனையிருங் குஞ்சித் தோட்டுக்
கிடையே
துணைமலர்ப் பிணைய றோன்றச் சூடிச் 135
சுடர்மணி யாழி படைபயின்று பலித்த
செறிவிர லங்கையின் மறைவுகொள
வைத்துக்
கழுநீர் நறும்போ துளர்த்துபு
பிடித்து மறங்கெழு
வேந்தனு மம்மர் தீரப்
போந்த பொழுதி னேந்துநிலை
மாடத்துப்
|
|
(இதுவுமது) 131 - 139:
வாங்கினன்............பொழுதின்
|
|
(பொழிப்புரை) உதயண குமரன்
அவ்வாடை முதலியவற்றை வாங்கிக்கொண்டு, ஆடை உடுத்தும் பதுமாபதி வழங்கிய
பொலிவுடைய குளிர்ந்த சந்தனத்தைத் தனது தூண்போன்ற
தோளினும் மார்பினும் அழகுற எழுதிக்கொண்டும் ஒப்பனை செய்யப்பட்ட கரிய
தன் தலைமயிரின்கண் சூட்டப்பெற்ற மாலைகளுக்கிடையே அப்பதுமாபதி புனைந்த
இரட்டைமலர் மாலையைச்சூட்டிக் கொண்டும், அவள் வழங்கிய சுடர்மணி
யாழியைப் படைக்கலம் பயின்று பகைவரை வென்று தேர்ந்த
செறிந்த விரல்களையுடைய அழகிய கையின்கண் மறைய வைத்துக்கொண்டும், அவள்
வழங்கிய நறுமணங் கமழும் செங்கழுநீர் மலரை நன்கு மலர்த்தித் தன் கையிற்
பற்றிக் கொண்டும் இவ்வாற்றான் வீரம் பொருந்திய அவ்வுதயண
மன்னனும் தனது காம மயக்கம் தீரப்பெற்று அப்பதுமாபதியைப் பெற்றான்
போன்று மகிழ்ந்து வெளிவந்த பொழுதின் என்க
|
|
(விளக்கம்) எழு - இருப்புத்
தூண்; ஒரு படைக்கலமுமாம். சாந்தம் பிணையல் ஆழி முதலியன பதுமாபதி
வழங்கிய பொருள்கள். அகலம் - மார்பு. குஞ்சி - ஆடவர் தலைமயிர்.. தோடு
-மலர்; ஆகு பெயர். பலித்த- வெற்றி வாய்த்த. உளர்த்துபு - வலிந்து
மலரச் செய்து. மறம் - வீரம். மம்மர் - மயக்கம்.
|