பக்கம் எண் :

பக்கம் எண்:155

உரை
 
3. மகத காண்டம்
 
9. கண்ணி தடுமாறியது
 
           போந்த பொழுதி னேந்துநிலை மாடத்துப்
     140    பக்க நின்ற பொற்பூங் கோதையும்
           கண்ணுற நோக்கிச் சின்னகை முகத்தினள்
           கண்ணிற் கூட்டமு மன்றி நம்முட்
           கண்ணிய மாயினங் கவல லென்றுதன்
           நெஞ்சி னகத்தே யஞ்சில மிழற்றிக்
     145    குன்றாக் கோயில் சென்றவள் சேர்ந்தபிற
 
        (பதுமாபதி உதயணனைக் கண்டு தன்னிடம் செல்லல்)
                 139 -145: ஏந்துநிலை............பின
 
(பொழிப்புரை) உதயணன் செயலைக் காண்டற்கு அவாவி
  மண்டபத்தின் மேனிலை மாடத்துப் பக்கத்தே நின்று நோக்கிக்
  கொண்டிருந்த பொன்மலர் மாலையையுடைய அப்பதுமாபதி
  தானும், உதயணன் வருகையைக்கண்களிப்ப நோக்கிப் புன்முறுவல்
  பூத்த முகத்தினை உடையளாய்த் தன் நெஞ்சினை நோக்கி
  ''நெஞ்சமே அஞ்சற்க! யாம் அப்பெருந்தகையோடு உள்ளப்
  புணர்ச்சி எய்தியதோடு அமையாது எம்முள் ஒருவர் மாலையை
  ஒருவர் பெற்று மகிழ்வேம் ஆயினேம். ஆதலால் கவலாதே
  கொள்'' என்று தன்னுள்ளேயே அழகிய சில தேற்றுரைகளைக்
  கூறிக்கொண்டு உயரிய தனது கன்னி மாடத்தை அடைந்த பின்னர்;
  என்க
 
(விளக்கம்) பக்கத்தே உதயணன் செயலை ஒற்றி நின்ற
  பூங்கோதை என்க. கண்ணிற் கூட்டம் - உள்ளப் புணர்ச்சி. கண்ணிய
  மாயினம் - ஒருவர் கண்ணியை ஒருவர் உடையேமாயினேம்.
  குன்றாக்கோயில் - இலக்கண அமைதி குன்றாத கோயில் என்க.
  அவள் ; பதுமாபதி