பக்கம் எண் :

பக்கம் எண்:157

உரை
 
3. மகத காண்டம்
 
9. கண்ணி தடுமாறியது
 
           போரடு தறுகண் பொருந்தலும் பொருக்கென
     150    நீருடை வரைப்பி னெடுமொழி நிறீஇய
           பிரியாப் பெருக்கத்துப் பிரச்சோ தனன்மகள்
           அரியார் தடங்க ணதிநா கரிகி
           மணியிருங் கூந்தன் மாசுகண் புதைப்பப்
           பிணியொடு பின்னி யணிபெறத் தாழ்ந்து
     155    புல்லெனக் கிடந்த புறத்தள் பொள்ளென
           நனவிற் போலக் காதலன் முகத்தே
           கனவிற் றோன்றக் காளையும் விரும்பி
 
              (உதயணன் கனாக் காண்டல்)
           149 - 157 : பொருக்கென,,,,,.,..,,,தோன்ற
 
(பொழிப்புரை) ஞெரேலெனக் கடல் சூழ்ந்த இப்பேருலகத்தே
  தனது புகழை நிலைநிறுத்திய நீங்காத செல்வப் பெருக்கத்
  தினையுடைய பிரச்சோதனன் மகளாகிய செவ்வரியோடிய
  பெரிய கண்களையுடைய நனி நாகரிகமுடைய வாசவதத்தை;
  தனது நீலமணி போன்ற கரிய கூந்தலை அழுக்கு மூடப்
  பின்னிப் பிணைந்து சடையாகி அழகு பெறத் தாழ்ந்து கிடந்த
  பொலிவிழந்த முதுகினை உடையவளாய் ஞெரேலென
  நனவின்கண் காணப் படுபவள் போலே தன் காதலன் முன்னர்க்
  கனவின்கண் தோன்றாநிற்ப; வென்க.
 
(விளக்கம்) பொருக்கென; விரைவுக் குறிப்பு. நீர் உடை
  வரைப்பு - கடல் சூழ்ந்த உலகம், நெடுமொழி -புகழ். நிறீஇய -
  நிலை நிறுத்திய, பிரியாப் பெருக்கம் - நீங்காத செல்வம்.
  அரி -செவ்வரி. அதிநாகரிகி ; வாசவதத்தை. மணி - நீலமணி.
  மாசு- அழுக்கு. பிணி - கட்டு புல்லென- பொலிவிழந்து. புறத்தள்
  - முதுகை உடையள். பொள்ளென- விரைந்து