பக்கம் எண் :

பக்கம் எண்:16

உரை
 
3. மகத காண்டம்
 
1. யாத்திரை போகியது
 
           மரகத மணிக்கை மாசில் பொற்றொடி
           உருவுபடச் செறித்த வுரோமக் கொட்டையிற்
           செந்தளிர் மராஅத்துப் பைங்காய் பழித்த
     115    செண்ணார் வடிவிற் கண்ணார் கத்தியர்
           ஏரில வங்கந் தீம்பூ வேலம்
           கப்புரப் பளிதமொ டுட்படுத் தியற்றிய
           வாசத் திரையொடு பாகுநிறைத் தடக்கிய
           மாசி லருமணி மடைத்த வாடையர்
     120    பட்டுச் சுவேகமொடு பாட்டுப்புற மெழுதிய
           கட்டமை சுவடி பற்றிய கையினர்
 
                 (இதுவுமது)
             112 - 121 ; மரகத.............கையினர்
 
(பொழிப்புரை) மரகத மணிகளிழைத்தகைப்பிடியினையும்
  பொன்னாலியன்ற பூண்களையும் அழகுண்டாகச் செருகப்பட்ட
  மயிராலாகிய  கொட்டையினையும்  சிவந்த  தளிரையுடைய
  மராமரத்தினது  பசிய  காயை  யொத்த ஒப்பனை செய்யப்பட்ட
  வடிவத்தினையும் கண்ணிறைந்த எழிலைமுடைய
  கத்தியினையுடையோரும் எழுச்சியுடைய இலவங்கத்தின் இனிய
  பூவும் ஏலமும் கற்பூரமுமாகிப பளிதமும் ஆகிய இவையிற்றைக்
  கூட்டிச்  செய்த  மணமுடைய  வெற்றிலையையும்  பாக்கையும்
  நிறைத்துக் கட்டிய குற்றமற்ற அரிய மணிகள் பதித்த அடைப்பை
  யினையுடையோரும் பட்டாலியன்ற உறையிற் செறிக்கப்பட்டனவும்
  புறத்தே  செய்யுள்  எழுதப்பட்டனவும்  கட்டுதல் அமைந்தனவும்
  ஆகிய சுவடிகளைப் பற்றிய கையினை யுடையோரும் என்க,
 
(விளக்கம்) கை - கைப்பிடி. தொடி - பூண்; கொட்டை .
  உரோமத்தால் உருண்டை வடிவாகச். செய்து செறித்த ஓருறுப்பு என்க.
  கப்புரப்பளிதம்- இருபெயரொட்டு திரை - வெற்றிலை. ஆடை ;
  ஆகுபெயர்; ஆடை அதனாலியன்ற பைக்கும் பின்னர் அஃது அருமணி
  பதித்துப் பொன்னாற் செய்த அடைப்பைக்கும் ஆயிற்றென்க சுவேகம் -
  உறை. சுவடி - நூல், பொத்தகம்.