பக்கம் எண் :

பக்கம் எண்:167

உரை
 
3. மகத காண்டம்
 
10. புணர்வு வலித்த
 
         
     20    சூழ்வினை யாளர்க்குத் தோன்றல் சொல்லும்
           ஆருயி ரன்னவென் னற்புவார் கொளீஇக்
           காரிகை மத்தினென் கடுவலி கடையும்
           வார்வளைத் தோளி வந்தனள் புகுதரு
           மாடம் புக்கிருந் தோடுகய லன்ன
     25    பெருங்கண் கோட்டி விரும்புவன ணோக்கி
           நாணொடு நிற்கு நனிநா கரிகம்
           காணலெ னாயிற் கலங்குமென் னுயிரென
           உரப்போர் வென்றி யுதயண குமரன்
           இரப்போன் போல வினியோர்க் குறைகொளக்
 
         (உதயணன் குறை இரத்தல்)
      20-29 ;சூழ்வினை.........குறைகொள
 
(பொழிப்புரை) ஆராய்ச்சித் திறம்மிக்க அவ்வமைச்சர்க்கு
  உதயணன் கூறுவான், '' அன்புடையீர் ! என் ஆருயிர் ஒத்தவளும்,
  தனது அன்பாகிய வாரைச் சுற்றித் தன் அழகாகிய மத்தினாலே
  என்னுடைய பேராற்றலாகிய தயிரை இடையறாது கடைகின்றவளும்
  வளையலணிந்த நெடிய தோள்களை உடையவளும் ஆகிய
  அப்பதுமாபதி வந்து புகுகின்ற மண்டபத்திலே யானும் புகுந்து அவள்
  பொருட்டுக் காத்திருந்து இயங்குகின்ற கயல்மீன் போன்ற தனது பெரிய
  கண்ணால் வளைத்து என்னைப் பெரிதும் விரும்பிப் பார்த்து யான்
  நோக்குங்காலைத் தான் நோக்காமல் நாணத்தோடு முகம் கவிழ்ந்து
  நிற்கும் அந்த நனி நாகரிகக்காட்சியை யான்என் கண்ணாற் காணாது
  அமைகுவனாயின் என் உயிர் பெரிதும் கலங்கும். ஆதலாலே யான்
  அவளைக் காண்டல் இன்றியாமையாததாயிற்று'' என்று ஆற்றல்மிக்க போர்
  வென்றியையுடைய அவ்வுதயண குமரன் தனக்கினியோ ராகிய
  அவ்வமைச்சர்பால் இரந்து கேட்பான் போலக் குறை வேண்டா நிற்ப;
  என்க,
 
(விளக்கம்) சூழ்வினையாளர் - அமைச்சர். தோன்றல் ; உதயணன்.
  ஆருயிரன்ன தோளி என்க. அன்பாகிய வார் என்க. காரிகையாகியமத்து
  என்க. காரிகை - அழகு கடுவலியாகிய தயிர் என்க. ஓடுகயல் -இயங்கும்
  கயல் மீன், உரம்- வலிமை, இனியோர்-நண்பர்கள்.