பக்கம் எண் :

பக்கம் எண்:173

உரை
 
3. மகத காண்டம்
 
10. புணர்வு வலித்த
 
         
           தனக்குநிக ரின்றித் தான்மேம் பட்ட
           வனப்பின் மேலும் வனப்புடைத் தாகிக்
           கலத்தொடு கவினிக் கண்கவர் வுறூஉம்
     65    நலத்தகு தேற னாணா டோறும்
           தலைப்பெரும் புயலாத் தனக்குநசை யுடையதைக்
           குலனுஞ் செல்வமு நலனு நாணும்
           பயிர்ப்பு முட்கு மியற்கை யேரும்
           மடனு மன்பு மாசில் சூழ்ச்சியும்
     70    இடனுடை யறிவு மென்றிவை பிறவும்
           ஒல்காப் பெரும்புகழ்ச் செல்வ முடைய,
 
         (பதுமாபதியின் சிறப்பு)
          62-71 : தனக்கு............உடைய
 
(பொழிப்புரை) தனக்கு ஒப்பின்றி  உலகிலுள்ள மகளிரின்
  அழகுக்கெல்லாம் மேம்பட்ட தனது அழகு மேலும் அழகுடைத்
  தாம் பொருட்டுச்  சிறந்த அணிகலன்களோடு அழகுற்றுத் தன்னைக்
  காண்போர் கண்ணைக் கவர்ந்து கொள்ளும் பெண்மை நலம் என்னும்
  தேனை நாள் தோறும் பெய்கின்ற தலைப்பெரும் புயல் போல்வாளாய்த்
  தனக்கு விருப்பமுடையதாகிய குலமும் செல்வமும் பெண்மை நலமும்
  நாணமும் பயிர்ப்பும் அச்சமும் மடமும் இளமைக்கு இயற்கையாகிய
  எழுச்சியும் அன்பும் குற்றமற்ற ஆராய்ச்சித் திறனும் பரந்த அறிவும்
  என்னும் இவையும் இன்னோரன்ன பிறவும் கெடாத பெரிய புகழாகிய
  செல்வமும் உடைய. என்க<
 
(விளக்கம்) மேலுள்ள பகுதி கிடைத்திலது. வனப்பு-அழகு.
  கலம்-அணிகலன். கவினி-அழகுற்று. நலம்-பெண்மை நலம்,
  தேறல்-  தேன். குலன்-குலம், நாண் பயிர்ப்பு உட்கு மடன்
  இவை பெண்மை பண்புகள்,  சூழ்ச்சி-நன்றும், தீதும் ஆராயும்
  ஆராய்ச்சித் திறன். இடனுடை அறிவு -பரந்த அறிவு. புகழாகிய
  செல்வம் என்க.

     10. புணர்வு வலித்தது முற்றிற்று

----------------------------------------------------------------------------