பக்கம் எண் :

பக்கம் எண்:181

உரை
 
3. மகத காண்டம்
 
12.அமாத்தியர் ஒடுங்கியது
 
         
           எப்பான் மருங்கினு மப்பா னாடி
           அகத்துநீ ருடைய வதனது மாட்சி
           மிகுத்தநூல் வகையின் மேவரக் காட்டக்
     55    கன்னியங் கடிநகர் காணவா வுடைய
           இளமரக் காவினுள் வளமைத் தாய
           நீர்நல னுணர்ந்து சீர்நலக் குருசிற்
           கெழுகோ லெல்லையு ளெழுமிது நீர்மற்
 
        (உதயணன் நீரூற்றுள்ள இடத்தைக் காட்டல்)
           52 - 58 ; எப்பான்............நீர்மற்று
 
(பொழிப்புரை) உதயணன்அவ்வரண்மனைக்கண்எவ்வெவ்விடத்தும்
  ஆராய்ந்து தன்னகத்தில் நன்னீருடைய அந்நிலத்தினது மாண்பினை
  மிகுத்துக்கூறும் நூல்வகையினாலே தருசகமன்னனுக்கு விருப்பமுண்டாகக்
  காட்டக் கருதிக் கன்னிமாடத்திலுள்ளோர் காணுதற்கு விரும்புதலையுடைய
  ஓர் இளமரச் சோலையினுள்ளே வளமிக்க நன்னீர் நலம் உண்மையை
  அறிந்து புகழ் மிக்க நன்மையுடைய அத்தருசக மன்னனுக்குக் காட்டிப்
  ''பெருமானே! இவ்விடத்து ஏழுகோல் தோண்டு மளவில் நீர் ஊற்று எழும்''
  என்று கூறி; என்க.
 
(விளக்கம்) எப்பால்மருங்கினும்- எவ்வெவ்விடங்களிலும்.அப்பால்
  - அவ்வப்பக்கங்களில். அதனது - அந்நிலத்தினது. மிகுத்த நூல் - விதந்து
  கூறும் நூல். நீர் நலம் - நீருண்மையாகிய நலம். சீர் - புகழ். குருசில் -
  தருசகன். கோல் - ஒரு நீட்டலளவைக் கருவி. இது - இவ்விடம்.