பக்கம் எண் :

பக்கம் எண்:183

உரை
 
3. மகத காண்டம்
 
12.அமாத்தியர் ஒடுங்கியது
 
         
     65    இருமுழத் தெல்லையுள் வரிமுகம் பொறித்த
           பொன்னிறத் தேரை போதரும் பின்னர்
           மும்முழத் தெல்லையுட் டெண்ணிறங் குயின்றது
           தோற்ற மினிதாய் நாற்ற மின்னாப்
           பருமண லுண்டது பண்ணுநர் வீழ
     70    உட்கா ழீன்ற வொருகோ லரையின்
           எட்பூ நிறத்தொடு கட்கா முறுத்தும்
           விளங்கறல் வெள்ளியின் வீசுறு மென்றதன்
           அகம்புக் கனன்போ லகன்ற ஞானத்தின்
           உண்ணெறிக் கருத்தி னண்ணிய தாகிய
     75    மண்ணின் சுவையு மின்னதென் றொழியா
           துரைப்பக் கேட்டே யோங்கிய பெரும்புகழ்த்
 
           இதுவுமது)
          65 - 76 ; இருமுழத்து.................... கேட்டே
 
(பொழிப்புரை) ''பெருமானே! இவ்விடத்து இரண்டு முழம்
  தோண்டு மளவிலே முகத்தின்கண் வரிகளையுடைய பொன்னிறமுடைய
  ஒரு தேரைவரும். அப்பால் மூன்று முழம் தோண்டுமளவில் தெளிந்த
  நிறமுடையதும் காட்சிக்கு இனியதும் தீநாற்றமுடையதும் ஆகிய பரிய
  மணல் உளதாகும். அதன் கீழ் ஒன்றரைக் கோலளவில் தோண்டு
  மளவில் எள்ளினது மலர்போன்ற நிறத்தையுடையதும் கூவல்
  தோண்டுபவரும் விரும்பும்படி வெள்ளிக் கோல்கள் போலக்காண்போர்
  கண்ணை மேலும் மேலும் காண்டற்கு விரும்பச் செய்யும்
  விளக்கமுடையதுமாகிய நன்னீர்வீசாநிற்கும்;'' என்று அந்நிலத்தின்கீழே
  புகுந்து அறிந்தவன் போலத்தனது பரந்த அறிவினாலே தனது உள்ளத்தே
  வழிபட்ட கருத்தினாலே அக் கூவலின் கண்அமைந்த மண்ணினது
  சுவைதானும் இங்ஙனம் இருக்குமென்று கூறி அதன்பிறவியல்புகளையும்
  ஒழியாமற் கூறக் கேட்டு; என்க.
 
(விளக்கம்) அது மும்முழத்தெல்லையுள் அகழுங்கால் அங்குப்
  பருமணல் உண்டு என்க. வரி-கோடுகள். ஒரு முழம்- நீட்டலளவை. இன்னா
  நாற்றமுடைய மணல் என்க. பண்ணுநர்-கூவல் தோண்டுபவர். வீழ-விரும்ப.
  உட்காழீன்ற என்பது, கோல் என்பதற்கு. வாளா அடை மாத்திரை. ஒரு கோலரை
  - ஒன்றரைக்கோல். அறல் - நீர். வெள்ளியின்- வெள்ளிக்கோல்கள்போன்று
  பண்ணுநர் வீழ வீசுறும் என்க.