பக்கம் எண் :

பக்கம் எண்:185

உரை
 
3. மகத காண்டம்
 
12.அமாத்தியர் ஒடுங்கியது
 
         
     80    பெருமண் வேந்தனைப் பிழைப்பின் றோம்புதற்
           குருமண் ணுவாவு முள்ளகத் தொடுங்க
           வாய்மொழி யிசைச்சனும் வயந்தக குமரனும்
           தேமொழி மாதர் தாய்முதற் கோயிலுட்
           டரும நூலுந் தந்துரை கதையும்
     85    பெருமுது கிளவியொடு பிறவும் பயிற்றி
           நங்கை  விழையு நாளணி கலங்கள்
           கொங்கணி மலரிற் கூட்டுவன ருய்த்துச்
           சென்றுவந் தாடல் செய்வது வலிப்பப்
           பிறவுறு தொழிலொடு மறவோ ரெல்லாம்
     90    ஆய்புக ழரசனை யற்றப் படாமற்
           காவல்புரிந் தனராற் கடிமனைக் கரந்தென்.
 
         (உருமண்ணுவா முதலியோர் செயல்)
               80 - 91 : பெருமண்............கரந்தென்
 
(பொழிப்புரை) இனி பெரிய நாட்டினை ஆளும் தம்மரசனைத்
  தவறின்றிப்பாதுகாத்தற்பொருட்டு உருமண்ணுவா என்னும்அமைச்சனும்
  அவ்வரண்மனையுள்ளேயே உருக்கரந்து உறையா நிற்ப, வாய்மையே
  மொழியும் இயல்புடைய இசைச்சனும் வயந்தக குமரனும் இனிய
  மொழியினையுடைய பதுமாபதியின் தாயினது  அரண்மனையின்கண்
  சென்று அம் மகளிர்க்கு  அறநூலும்   தந்துரை கதைகளும் பெரிய
  பழமொழிகளும்  கற்பிப்போராய் இருந்து கொண்டு பதுமாபதி விரும்பும்
  நாளணிகலன்களைத் தேன் பொருந்திய மலர் மாலைகளோடு சேர்த்து
  உய்ப்போராய்க் கரந்துறையா நிற்ப, ஏனைய மறவர்களும்
  அவ்வரண்மனைக்கட்சென்று ஒற்றாடல்செய்வதனைக்கருதித்தமக்குப்
  பொருந்திய வெவ்வேறு வினையுடையோராய் வதிந்து அழகிய
  புகழையுடைய தம்மரசனாகிய உதயணன் சோர்வுபட்டு விடாமல் பாதுகாவல்
 
(விளக்கம்) வேந்தன் - உதயணன். வாய்மொழி; - உண்மைமொழி.
  மாதர் - பதுமாபதி. தருமநூல் - அறநூல். தந்துரை கதை - கட்டுக் கதை.
  பெருமுதுகிளவி - பெருமையையுடைய பழமொழி; பிற - பிசியும் நொடியும்
  போல்வன என்க, நங்கை - பதுமாபதி. நாளணிகலம் - ஒவ்வொரு நாளுக்கும்
  உரிய அணிகலன் ஆடல் - ஒற்றாடல். மறவோர் - உதயணன் மறவர்கள்.
  அற்றம் சோர்வு. கடிமனை - அரண்மனை.

             12. அமாத்தியர் ஒடுங்கியது முற்றிற்று