பக்கம் எண் :

பக்கம் எண்:193

உரை
 
3. மகத காண்டம்
 
13. கோயில் ஒடுங்கியது
 
           வண்டொடு கூம்பிய மரைமலர் போல
           ஒண்டார் மார்பனை யுட்பெற் றுவகையின்
     50    மணிவரைச் சாரன் மஞ்ஞை போல
           அணிபெற வியலி யடிக்கல மார்ப்பத்
           தொய்யில் வனமுலைத் தோழி மாரொடு
           பையப் புக்குப் பல்வினைக் கம்மத்துச்
           சுருக்குக் கஞ்சிகை விரித்தனர் மறைஇப்
     55    பள்ளிப் பேரறைப் பாயலு ளல்லது
           வள்ளிதழ்க் கோதையை வைக்கப் பெறீரென
 
             (இதுவுமது)
           48-56 ; வண்டொடு,,.,,.,,,பெறீரென
 
(பொழிப்புரை) அது கண்ட பதுமாபதியும் யாப்பியாயினியும் தன்பால்
  தேன்பருகிய வண்டினை இதழினுள் வைத்து மூடிக்கொண்ட தாமரை
  மலர் போல ஒளி பொருந்திய மலர் மாலையணிந்த மார்பையுடைய
  உதயணகுமரனைத் தங்கள் சிவிகையினூடே பெற்று மூடிவைத்து
  அம்மகிழ்ச்சியினாலேயே மணிகளையுடைய மலைச்சாரலிலே வாழுகின்ற
  மயில் போல அழகுற நடந்து தங்கள் காலணிகள் ஆரவாரிக்கும்படி
  தொய்யிலெழுதப்பட்ட அழகிய முலையினையுடைய தோழிமாரொடு
  மெல்லத்தாமும் சிவிகையுட் புகுந்து பலவாகிய தொழில்திறம் அமைந்த
  சுருக்குத் திரையினை விரித்துச் சிவிகையை மூடிக்கொண்டு சிவிகை
  சுமப்போரை நோக்கி அரண்மனைக்கண் உள்ள எமது கன்னி மாடத்தின்கண்
  பள்ளிப் பேரறையில் உள்ள படுக்கையின்கண் அல்லது பெரிய
  மலர்மாலையணிந்த எம்பெருமாட்டியை வேறிடத்தில் வைத்தலைத் தவிர்க
  என்று என்க.
 
(விளக்கம்) உதயணனைச் சிவிகையுள் வைத்து மூடியதற்கு 
  வண் டொடு கூம்பிய மரை மலர் உவமை. மணி வரை -
  மணிகளையுடைய. மலை. இயலி,-நடந்து. பைய-மெல்ல. 
  சுருக்குக் கஞ்சிகை- வேண்டிய பொழுது சுருக்கிக் கொள்ளக்
  கூடிய திரை. மறைஇ- மறைத்துவைத்து. பாயல்- படுக்கை.
  கோதை. பதுமாபதி.