பக்கம் எண் :

பக்கம் எண்:194

உரை
 
3. மகத காண்டம்
 
13. கோயில் ஒடுங்கியது
 
            யாப்புறக் கூறிக் காப்போர் பின்செல
           வலிகெழு மொய்ம்பிற் சிலத மாக்கள்
           அதிர்ப்பி னுசும்ப மதிற்புறம் பணிந்த
           காவும் வாவியுங் காமக் கோட்டமும்
           பூவீழ் கொடியும் பொலிவில வாக
           வாழ்த்துப்பலர் கூறப் போற்றுப்பல ருரைப்ப
           வழுவில் கொள்கை;வான்றோய் முதுநகர்
           மணியுமிழ் விளக்கின் மறுகுபல போகிக்
     65    கொடியணி கோயில் குறுகலும் படியணி
 
             (இதுவுமது)
           57-65 ; யாப்புற.........குறுகலும்
 
(பொழிப்புரை) பொருத்தமாகச் சொல்லிக் காவலாளர்
  பின்தொடர்ந்து வரவும் வலிமைமிக்க உடம்பினையுடைய
  சிவிகை மாக்கள் ஆரவாரத்தோடு அதட்டிக் கொண்டு சுமப்பக்,
  காமக்கோட்டத்து மதிலின் புறத்தே அழகு செய்துள்ள
  பொழில்களும் வாவிகளும் அக்காமக்கோட்டமும் பூவுதிர்ந்த
  கொடிகள் போன்று பொலிவிழந்து போகவும் பலர் வாழ்த்தவும்
  பலர் போற்றவும் குற்றமற்ற அறக்கொள்கையுடைய வானளாவிய
  முது நகராகிய அவ்விராசகிரிய நகரத்தினது மணி விளக்குகள் ஒலி
  பரப்புகின்ற வீதிகள்  'பலவற்றுள்ளும் போகிக் கொடிகளால்
  அழகுற்ற அரண்மனை வாயிலையடைதலும்; என்க,
 
(விளக்கம்) சி்லதமாக்கள் - சிவிகை சுமப்போர்.
  உசும்ப-அதட்ட; துண்ட எனினுமாம். புறம்பு - புறம்,
  முதுநகர் - பழைய நகரம் ஒளியுமிழ் மணி விளக்கு என்க.
  மறுகு - வீதி. கோயில் - அரண்மனை.