பக்கம் எண் :

பக்கம் எண்:196

உரை
 
3. மகத காண்டம்
 
13. கோயில் ஒடுங்கியது
 
           வாயில் புக்குக் கோயில் வரைப்பிற்
           கன்னி மாடத்து முன்னறை வைத்தலின்
     75    பகலே யாயினும் பயிலா தோர்கள்
           கவலை கொள்ளுங் கடிநிழற் கவினி
           மாடெழு மைந்தரு மூடு சென்றாடா
           அணியிற் கெழீஇ யமர ராடும்
           பனிமலர்க் காவின் படிமைத் தாகி
     80    இருளொடு புணர்ந்த மருள்வரு மாட்சித்
           தன்னகர் குறுகித் துன்னிய மகளிரை
 
              (இதுவுமது)
           73 - 81 ; வாயில்.........குறுகி
 
(பொழிப்புரை) அப்பெருவாயிலுட் புகுந்து உட்சென்று
  அவ் வரண் மனையகத்தே உள்ள .கன்னி மாடத்து
  முகப்புப் பேரறையின்கண் சிவிகையைச் சுமப்போர்
  வைத்தலாலே, அவ்விடத்தே பழகாதவர்கள் பகற்
  காலத்தினும் கவலை கொள்ளுவதற்குக் காரணமான இருண்ட
  நிழலால் அழகெய்தித் தவழ்ந்து எழுந்து நிற்கும் இளஞ்
  சிறா அர்களும் உள்ளே சென்று ஆடியறியாத தாய்த்
  தேவர்கள் விளையாடுகின்ற குளிர்ந்த கற்பகப் பூஞ்சோலையை
  ஒத்ததாய்க் கதிரவன் ஒளி புகாமையின் எப்பொழுதும்
  இருண்டிருக்கும் பூம்பொழிலினூடே கண்டோர் மருளுதற்குக்
  காரணமான தன்னுடைய கன்னி மாடத்தை அடைந்து என்க.
 
(விளக்கம்) பயிலாதோர்-ஆங்குப் பழகியறியாதோர். கவினி -
  அழகெய்தி எழுமைந்தர் -தவழ்ந்து எழுகின்ற இளஞ்சிறார்.
  அமரராடு பனி மலர்க்கா - கற்பகச் சோலை.
  நகர் - கன்னிமாடம்.