பக்கம் எண் :

பக்கம் எண்:198

உரை
 
3. மகத காண்டம்
 
13. கோயில் ஒடுங்கியது
 
         
     85    தக்க வெல்லை யிருத்தலின் மிக்க
           காழகி னறும்புகை யூழ்சென் றுண்ட
           மணிக்காற் கட்டிலுள் வல்லோள் படுத்த
           அணிப்பூஞ் சேக்கை யறைமுத லாகப்
           பக்கமுந் தெருவும் புக்கமுறை பிழைய
     90    தாராய்ந் தந்தணி யமைத்ததன் பின்றைப்
 
                     (இதுவுமது)
               85-90 : மிக்க,..,..,,.பின்றை
 
(பொழிப்புரை) பார்ப்பனத் தோழியாகிய யாப்பியாயினி பதுமா
  பதியினது வைர மேறிய அகிலினது நறிய புகை முறையாக
  ஊட்டப் பெற்ற மாணிக்கக் கால்களையுடைய கட்டிலின்
  அகத்தேயும் கலைவன்மையுடைய அப்பதுமாபதி படுத்த
  அழகிய பள்ளியறை முதலாக அதன் பக்கங்களையும்
  அந்தப்புரத்திலுள்ள தெருக்களையும், முறைபிறழாமல் சென்று
  சென்று பார்த்து ஆங்கெல்லாம் பிறர் யாரும் இன்மையறிந்து
  வந்த பின்னர் என்க.
 
(விளக்கம்) காழகில்-வயிரமேறிய அகிற்கட்டை. ஊழ்- முறைமை.
  வல்லோள் - பதுமாபதி. சேக்கையறை-பள்ளியறை. தெரு-அந்தப்புரத்துத்
  தோழியர் உறைகின்ற தெரு. அந்தணி-யாப்பியாயினி.