பக்கம் எண் :

பக்கம் எண்:2

உரை
 
3. மகத காண்டம்
 
1. யாத்திரை போகியது
 
          பழனப் படப்பைப் பாஞ்சால ராசன்
     5    அழன்மிகு சீற்றத் தாருணி யரசன்
          திரியு நெய்யு மொருவயிற் செல்லிய
          எரிவிளக் கற்ற மிருள்பரந் தாங்குப்
          பாய தொல்சீர்ப் பகையடு தானை
          ஏய ரற்றத் திடுக்கட் காலை
     10   அன்றவ ணறிந்தே தொன்றுவழி வந்த
          குலப்பகை யாகிய வலித்துமேல் வந்து
          நன்னகர் வௌவு மின்னாச் சூழ்ச்சியன்
 
                (உதயணன் உட்கோள்)
             4 - 12: பழன............சூழ்ச்சியன்
 
(பொழிப்புரை) இனி இலாவாண நகரத்தே இருந்த உதயண மன்னன்,
  ''என்னே! கழனிகளையும் தோட்டங்களையும் உடைய பாஞ்சாலநாட்டு
  மன்னனும் நம்பால் வெப்பமிக்க வெகுளியையுடை  யவனும் ஆகிய
  ஆருணியரசன்  தன்பாலிட்ட திரியும் நெய்யும்  ஒரு சேர  அற்றுப்
  போம்படி எரிந்த  விளக்கினது அறுதியிலே   இருளானது யாண்டும்
  பரவிக் கவிழ்ந்து கொள்ளுதல் போன்று பரவிய பழைய புகழையும்
  தம்  பகைவரைக் கொன்று வாகை சூடும்  வன்மையுடைய  படைப்
  பெருக்கத்தினையும்  உடைய  ஏயர்களின்  சோர்வுடைய  இடுக்கட்
  காலத்தே அச்சோர்வினை அற்றைநாள்  அவ்விடத்திருந்தே
  தெரிந்துகொண்டு  தொன்றுதொட்டுத்  தான்  மேற்கொண்ட
  குலப்பகைவனாதற்குத் துணிந்து நம் நகரின் மேல் படையொடு வந்து
  நமது நல்ல நகரத்தைக்  கைப்பற்றிக் கொள்ளும் இன்னாமையுடைய
  சூழ்ச்சியை உடையனாயினன், என்க.
 
(விளக்கம்) இஃது உதயணன் தன் நெஞ்சத்தே, கருதியது என்க.
  பழனம்-கழனி, படப்பை-தோட்டம். தன்குலத்தார்க்கும் அவன் குலத்தார்க்கும்
  தொன்றுதொட்டுப் பகைமையுள தெம்பான் அழன்மிகு சீற்றத்து ஆருணி
  அரசன் என்றான். விளக்கெரியுங்காலமெல்லாம் இருள் பரவாது பதுங்கியிருந்து
  அதன் அறுதியில் அவ்விளக்கொளி பரவிய இடனெல்லாம் கவிழ்ந்து கோடல்
  போன்று நாம் ஆட்சி செய்யும் துணையும் அடங்கியிருந்து யாம் சோர்வுற்று
  ஆட்சியொழிந்துழி மேல் வந்தனன் என்றவாறு.
     செல்லிய- அற்றுப்போக. பாய - பரவிய. தொல்சீர்- தொன்று
  தொட்டு வளர்ந்து வந்தபுகழ். ஏயர் என்றான் தனக்கும் அவனுக்குமுள்ள
  பகை தன்முன்னோர் காலத்திருந்தே தொடர்ந்து வருதலைக் கருதி. ஏயர்-
  உதயணன் தாய்வழி முதல்வர். ?அன்று என்றது தான் தெய்வயானையைத்
  தேடப்புறப்பட்ட நாளை என்க. ஆகிய-ஆக. வலித்து - துணிந்து. நன்னகர்
  என்றது கோசம்பி நகரத்தை. இன்னா- துன்பம். அச்சூழ்ச்சி அவனுக்கே
  கேடாய் முடிதலின் இன்னாச் சூழ்ச்சி என்றான், இனி அஃதறத்து
  வழிப்படாமையின் இன்னாச் சூழ்ச்சி என்றான் எனினுமாம்.