பக்கம் எண் :

பக்கம் எண்:20

உரை
 
3. மகத காண்டம்
 
1. யாத்திரை போகியது
 
           மடமா னம்பிணை கண்டு மாதர்
           கடைபோழ் நெடுங்கட் காம நோக்கம்
     145    உள்ளத் தீர வொள்ளழ லுயிரா
           இனத்திற் கெழீஇ யின்ப மகிழ்ச்சியொடு
           புனத்திற் போகாது புகன்றுவிளை யாடும்
           மான்மடப் பிணையே வயங்கழற் பட்ட
           தேனேர் கிளவி சென்ற வுலகம்
     150    அறிதி யாயின் யாமு மங்கே
           குறுகச் செல்கங் கூறா யெனவும்
 
                 (இதுவுமது)
           143 - 151 ; மாதர்............எனவும்
 
(பொழிப்புரை) வாசவதத்தையின் கடை நீண்டு
  கண்டோர் நெஞ்சத்தைப் பிளக்கும் நெடிய கண்ணினது காமப்
  பார்வை தன் நெஞ்சத்தே தோன்றி அதனை ஈர்வது போன்று
  வருத்துதலானே ஒள்ளிய தீயுண்டாகப் பெரு மூச்செறிந்து ?நினது
  காதற்றுணையொடு பொருந்தி இன்பத்தாலுண்டான மகிழ்ச்சியினாலே
  காட்டினூடும் செல்லாமல் அத்துணையைப்பெரிது விரும்பி
  விளையாடா நின்ற பிணை மடமானே! விளங்கா நின்ற தீயினுட்
  பட்டு இறந்தொழிந்த தேன்போன்ற இனிய மொழி பேசும்
  வாசவதத்தை சென்ற உலகத்தை நீ அறிவாயோ. அறிவாயாயின்
  எமக்குக் கூறுவாயாக! கூறுவாயாகின் யாமும் அவளிருக்கும்
  உலகத்தே அவளை அணுகப் போவோங் காண் என்றும் என்க.
 
(விளக்கம்) உன் கணவனாகிய இரலை உன் மருங்கே
  நின்று உன்னைப் புறங்காத்தல் போன்று யாமும் அவள் மருங்கிருந்து
  அவளைப் பாதுகாத்து இன்ப மகிழ்ச்சியாலே விளையாடுவோம்
  என்பது கருத்து. கடை பிளவுபட்ட கண் எனினுமாம். புகன்று-விரும்பி.
  தேனேர் கிளவி - வாசவதத்தை.