பக்கம் எண் :

பக்கம் எண்:202

உரை
 
3. மகத காண்டம்
 
14. நலனாராய்ச்சி
 
         
           இருளரு நுண்மதித் தோழியை யெழுதெனக்
           கோயில் வட்டமுங் கோணப் புரிசையும்
     15     வாயின் மாடமும் வஞ்சப் பூமியும்
           இலவந் திகையு மிளமரக் காவும்
           கலவம் புகலுங் கான்கெழு சோலையும்
           உரிமைப் பள்ளியு மருமைக் காப்பிற்
           படைக்கலக் கொட்டிலும் புடைக்கொட் டாரமும்
 
        (தோழி எழுதித்தந்த அரண்மனை வடிவம் முதலியவற்றைக்
             கண்டு உதயணன் நினைத்தல்)
            13 - 19; இருள்,,.,,,,,.கொட்டாரமும்
 
(பொழிப்புரை) ஒருநாள் உதயணன் மயக்கந் தீர்ந்த மதிநுட்பமுடைய
  தோழியாகிய யாப்பியாயினியை நோக்கித் ''தோழி! நீ இவ்வரண்மனையின்
  அமைப்பினை ஒரு படத்தில் வரைந்து எனக்குக் காட்டுக என
  வேண்டுதலாலே அத்தோழி வட்டவடிவமான அவ்வரண்மனையையும்
  கோணங்களையுடைய மதில் அமைப்பையும் கோபுரத்தின் அமைப்பையும்
  அவ்வரண்மனைக்குள் உள்ள கள்ளப் பூமிகளையும் எந்திர வாவியினையும்
  இளமரச் சோலைகளையும் மயில்கள் விரும்பும் மணமிக்க
  மலர்ச்சோலையையும் உவளகவமைப்பையும் கிட்டுதற்கரிய காவலையுடைய
  படைக் கலக்கொட்டில் அமைப்பையும் பக்கத்தேயுள்ள கூலக்
  களஞ்சியங்களையும்; என்க,
 
(விளக்கம்) தோழி - யாப்பியாயினி. கோயில் - அரண்மனை,
  புரிசை மதில். வஞ்சப் பூமி - உள்ளுப் பொய்யான தரை. இலவந்திகை -எந்திரவாவி.
  கலவம்-மயில்; ஆகுபெயர், புகலும் - விரும்பும். கான்- மணம்' உரிமைப்
  பள்ளி - உவளகம். படைக் கலக்கொட்டில் - படைக்கலம் வைக்கும் கொட்டில்.
  கொட்டாரம்- நெல் முதலிய கூலம் வைக்கும் களஞ்சியம்.