பக்கம் எண் :

பக்கம் எண்:203

உரை
 
3. மகத காண்டம்
 
14. நலனாராய்ச்சி
 
         
     20    நடைப்பெரு வாயிலு முடைக்குறும் புழையும்
           அவைமண் டபமு மாடம் பலமும்
           வகைமாண் டெய்வம் வழிபடு தானமும்
           குதிரைப் பந்தியு மதிர்த லானா
           யானைத் தானமுந் தானைச் சேக்கையும்
     25    எயில தகற்றமு மயில்விளை யாடும்
           சுதைவெண் குன்றமும் புதையிருட் டானமும்
           உடையன வெல்லா முள்வழி யுணர்ந்து
           தெளிதல் செல்லாத் தெவ்வ னிவனெனின்
           அளியியற் செங்கோ லரசுமுதல் வவ்வலும்
     30    எளிதெனக் கென்னு மெண்ணின னாகிப்
 
           இதுவுமது
      20 -30: நடை........,ஆகி
 
(பொழிப்புரை) நடந்து செல்லுதற்குரிய பெரிய வாயிலும்
  அவ் வாயிலுடைய சிறுவாயிலும், அவைமண்டபமும், கூத்தாட்டம்பலமும்
  பலவேறுவகைப்பட்ட தெய்வங்களை வழிபாடு செய்யும் இடங்களும்,
  குதிரைக் கொட்டிலும், பிளிறுதல் ஒழியாத யானை கட்டுமிடங்களும், காலாட்
  படையினர் தங்குமிடங்களும் மதிலினுடைய அகலமும், மயில்கள்
  விளையாடிக்கொண்டிருக்கும் வெண்சுதை தீற்றிய செய்குன்றங்களும்,
  பொருள்களை மறைக்கும் இருட்.டறைகளும், இன்னோரன்ன
  அவ்வரண்மனையுடைய எல்லாப் பொருள்களும் அமைய அத்தோழி படத்தில்
  வரைந்துகொடுப்ப, அதனைக் கூர்ந்துநோக்கி அவ்வரண்மனையின்
  இயல்பெல்லாம் நன்குணர்ந்து கொண்டு உதயணகுமரன் இத்தருசகமன்னன்
  ஒரோவழி நம்மால் தெளிதல் கூடாத பகைவனாயிருப் பானாயின் உலகோம்பும்
  இயற்கையையுடைய செங்கோலையுடைய அவனுடைய அரசாட்சியைக் கவர்ந்து
  கொள்ளுதல் எனக்கு மிகவும் எளிதேயாகும் என்று தன்னுட் கருதியவனாய்; என்க.
 
(விளக்கம்) பெருவாயிலும் அஃதுடைத்தாய குறும்புழையும் என்க.
  குறும்புழை - நுழைவாயில். அவைமண்டபம் - அவைகூடும் அத்தாணி
  மண்டபம் ஆடம்பலம் -கூத்தாட்டரங்கம். குதிரைப் பந்தி-குதிரைக்கொட்டில்.
  அதிர்தல் - பிளிறுதல். யானைத்தானம்-யானைக்கட்டுமிடம். தானை-ஈண்டுக்
  காலாட்படை. அகற்றம்-அகற்சி, குன்றம்-செய்குன்றம். எல்லாம் தோழி எழுதிக்
  காட்ட உணர்ந்து என்க. தெவ்வன்- பகைவன், இவன் - தருசகன்.
  அரசு - அரசாட்சி, வௌவல் - கவர்ந்து கொள்ளுதல்.