உரை |
|
3. மகத காண்டம் |
|
14. நலனாராய்ச்சி |
|
பெண்பாற் சூழ்ச்சியிற் பிழைப்புப்
பலவெனும்
நுண்பா னூல்வழி நன்கன
நாடின் ஏத
மில்லை யிதுவெனத்
தேறி மாதர்
மாட்டு மகிழ்ச்சியொடு தெளிதல்
35 நீதி யன்றென நெஞ்சத்
தடக்கிச்
செருக்கய னெடுங்கண் செவ்வி
பெற்றாங்
குரத்தகை யண்ண லுறைவது வலிப்பத் |
|
(இதுவுமது) 31 - 37;
பெண்.......,,வலிப்ப |
|
(பொழிப்புரை) பின்னரும்
பெண்ணினது சூழ்ச்சியின்கண் அகப்படுதலால் உண்டாகும் பிழைகள் மிகவும்
பலவாகும் என்று கூறுகின்ற நுண்ணிய பகுதிகளையுடைய அறநூல்வழி
நின்று ஆராயுமிடத்தும், யான் இவ்வரண்மனையகத்துத் தங்கி இருத்தல்
குற்றமில்லையாகும் என்று தெளிவடைந்து மேலும் மகளிரிடத்து உண்டாகும்
மகிழ்ச்சியோடு காரியங்களைத் தெளிவது நீதியாகாது என்னும் அறவுரையை
மறவாது தன் நெஞ்சத்தில் அடக்கிக்கொண்டு ஒன்றனோடொன்று போரிடுகின்ற
கயல்மீன்களை யொத்த நெடிய கண்களையுடைய பதுமாபதியினோடு
அளவளாவும் செவ்வியைப் பெற்று அக்கன்னிமாடத்திலேயே தங்குவதனைப்
பேரறிவுடைய அவ்வுதயண மன்னன் தன்னுள் துணியாநிற்ப; என்க. |
|
(விளக்கம்) பெண்பாற்
சூழ்ச்சியிற் பிழைப்புப் பல என்பது அறநூற்கூற்று. அங்ஙனமாயினும்
இவ்வரண்மனையினின்றும் யான்வெளியேறுதல் எளிதேயாகும் என்பது பற்றி இது
ஏதமில்லை என்றான், இது- இங்குத் தங்குதல். மாதர்மாட்டு மகிழ்ச்சியொடு
தெளிதல் நீதியன்று என்பதும் அறநூற்றுணிவு, நெடுங்கண்-பதுமாபதி.
உரத்தகையண்ணல்- உதயணன். வலிப்ப- துணிய. |