பக்கம் எண் :

பக்கம் எண்:207

உரை
 
3. மகத காண்டம்
 
14. நலனாராய்ச்சி
 
         
           மழையயா வுயிர்க்கும் வான்றோய் சென்னி
           இழையணி யெழுநிலை மாடத் துயரறை
           வாள்வரி வயமான் மூரி நிமிர்வின்
           நிலைக்கா லமைந்த நிழறிகழ் திருமணி
     55    யிகற்குரல் வளைஇய கழுத்திற் கவ்விய
           பவழ விழிகைப் பத்திக் கட்டத்துப்
           பட்டுநிணர் விசித்த கட்டமை கட்டிலுட்
           பொழுதிற் கொத்த தொழில வாகி
           எழுதுவினைப் பொலிந்த விழுதுறழ் மென்மைய
     60    முறைமையி னடுத்த குறைவில் கோலமொடு
           நிரப்ப மெய்திய நேர்பூம் பொங்கணைப்
           பரப்பிற் கொத்த பாய்காற் பிணைஇ
           அரக்குவினைக் கம்மத் தணிநிலைத் திரள்காழ்
           ஒத்த வூசி குத்துமுறை கோத்த
     65    பவழ மாலையும் பன்மணித் தாமமும்
           திகழ்கதிர் முத்தின் றெரிநலக் கோவையும்
 
           (கட்டில்)
         51 - 66 ; மழை.........கோவையும்
 
(பொழிப்புரை) முகில்கள் தங்கி இளைப்பாறுதற்கு ஏற்றதாய் வானத்தைத்
  தீண்டி உயர்ந்த உச்சியினையுடைய மணிகளிழைத்து அழகிய எழுநிலை
  மாடத்தில் வைத்து மேனிலை மாடத்தின்கண் உள்ள அறையின்கண்
  வாள்போலும் கோடுகளையுடைய புலிமூரி நிமிர்ந்த காலத்திலுள்ள
  அதன்கால்களைப் போன்ற வடிவமைந்த கால்களையுடைய ஒளிதிகழ்கின்ற
  அழகிய மணிகளிழைத்த மூட்டுவாயமைந்த கிண்கிணிமாலை வளைத்துக்
  கட்டப்பட்ட கழுத்தினையும் வாயால் கவ்விய பவளத்தாலியன்ற
  கைச்சரிகையையும் உடைய நிரல்பட்ட கட்ட.ங்களையுடைய பட்டாற்
  பின்னிக்கட்டிய கட்டமைந்த கட்டிலின்கண் பருவத்திற்கு ஏற்ற
  தொழிற்பாடுடையதாகி ஓவியத் தொழிலால் பொலிவுற்ற வெண்ணெய்
  போன்று ஊற்றினிமை உடையவுமாகிய அன்னத்தூவி முதலிய ஐந்தும்
  மூன்றாக முறைமையால் அடுத்த நேரிய பொலிவுடைய அணைப்
  பரப்பிற்குப் பொருந்திய பாய்காலை இணைத்து அரக்குத் தொழில்
  திறத்தால் அழகிய நிலைமையினையுடைய கொட்டைகளிடத்தே
  ஒன்றுபோல் ஒத்திருப்ப ஊசியாற்குத்தி முறையே கோத்த பவழ
  மாலையும் பலவாகிய மணிமாலைகளும் விளங்குகின்ற ஒளிமுத்தின்
  ஆராய்ந்தெடுத்த அழகிய கோவையும்; என்க.
 
(விளக்கம்) மழை முகில், அயாஉயிர்க்கும் - இளைப்பாறும்.
சென்னி-உச்சி, வயமான்-புலி. நிழல்-ஒளி. கயில் - மூட்டு வாய்.
குரல்-கிண்கிணிமாலை. இழிகை-கைச்சுரிகை. கட்டம் வகுப்பறை, நிணர்
பின்னல். பொழுது. கார் முதலிய பருவங்கள். இழுது-வெண்னெய்.
பொங்கணை உயர்ந்த அணை. பாய்கால் பரப்புச்சட்டம்,
தெரிநலம் - ஆராய்ந்தெடுத்த அழகு,