பக்கம் எண் :

பக்கம் எண்:209

உரை
 
3. மகத காண்டம்
 
14. நலனாராய்ச்சி
 
         
           பைங்கருங் காலிச் செங்களி  யளைஇ
           நண்பகற் கமைந்த வந்துவர்க் காயும்
           மிருங்கண் மாலைக்குப் பெரும்பழுக் காயும்
           வைகறைக் கமையக் கைபுனைந் தியற்றிய
     85    இன்றே னளைஇய விளம்பசுங் காயும்
           பைந்தளி ரடுக்கும் பலமுத லாகிய
           மன்பெரு வாசமொடு நன்பல வடக்கிய
           பயில்வினை யடைப்பையொடு படியகந் திருத்தி
 
          (பாக்குவகை முதலியன)
        81-88 ; பைங்கருங் ......... திருத்தி
 
(பொழிப்புரை) பசிய கருங்காலிக் குழம்பில் ஊறவைக்கப்பட்ட
  நண்பகலுக்கு ஏற்ற அழகிய சிவந்த களிப்பாக்கும் மாலைப்பொழுதிற்கு
  ஏற்றகரிய கண்ணையுடைய பெரிய பழுத்த பாக்கும் வைகறைப் பொழுதிற்கு
  ஏற்ற கைசெய்யப்பட்ட இனிய தேன் கலந்த இளம்பசும்பாக்கும் பசிய
  இளவெற்றிலை யடுக்கும் சாதிக்காய் முதலிய பெரிய மணப் பொருள்கள்
  நல்லன பலவும் அடக்கி வைத்த தொழில் திறமமைந்த அடைப்பையொடு
  படிக்கங்களையும் திருத்தி வைத்து; என்க.
 
(விளக்கம்) கருங்காலியினது சிவந்த குழம்பில் ஊறிய துவர்ப்புமிக்க
  பாக்கும் என்க. இதனைக் களிப்பாக்கு என்று கூறுப, இதுபகற் பொழுதிற்குரிய
  பாக்கு. இருங்கண்-பாக்கினது கரியகண். பழுக்காய் - முதிர்ந்தபாக்கு. இது
  மாலைக்கு உரியது. இளம்பசுங்காய் - பிஞ்சுப்பாக்கு, இதனோடு தேன்கலந்து
  வைகறைப் பொழுதில் தின்றால் உடலுக்கு நலம் பயக்கும் என்க.
  தளிரடுக்கு - இளவெற்றிலை அடுக்கு. பலம்-சாதிக்காய்.
  அடைப்பை - வெற்றிலைப்பை. படியகம் - தின்று உமிழ்தற்குரிய ஒருவகைக்
  கலம், படிக்கம் எனினுமாம்.