பக்கம் எண் :

பக்கம் எண்:21

உரை
 
3. மகத காண்டம்
 
1. யாத்திரை போகியது
 
           பணிவரை மருங்கிற் பாறை தோறும்
           மணியிரும் பீலீ மல்க வுளரி
           அரும்பெற லிரும்போத் தச்சங் காப்ப
     155    மதநடை கற்கு மாமயிற் பேடாய்
           சிதர்மலர்க் கூந்தற் செந்தீக் கவர
           மயர்வனள் விளிந்தவென் வஞ்சி மருங்குல்
           மாறிப் பிறந்துழி மதியி னாடிக்
           கூறிற் குற்ற முண்டோ வெனவும்
 
                 (மயிற் பெடை)
           152 - 159 ; பணி............ எனவும்
 
(பொழிப்புரை) தாழ்ந்த மலைப்பக்கத்தே பாறை
  தோறும் பெறலரிய நீலமணி போலும் நிறமுடைய தோகையினை
  விரிய உளர்ந்து நினக்கு அச்சம் சிறிதும் உண்டாகாமல் நின்
  காதலனாகியமயிற்சேவல் நின்னைப் பாதுகாவாநிற்ப இளநடை
  பயிலாநின்ற பெரிய மயிற் பேடையே! சிதருகின்ற மலரணிந்த தன்
  கூந்தலைச் சிவந்த தீப்பற்றிக் கொள்ளலாலே மயங்கி. இறந்துபட்ட
  என் ஆருயிர்க் காதலியாகிய கொடியிடை வாசவதத்தை நல்லாள்
  இம்மை மாறி மறுமையிற் பிறந்துள்ள இடத்தை நின் கூர்த்த
  அறிவால் ஆராய்ந்து கண்டு எனக்குக் கூறுவாயாயின் அச்செயல்
  நினக்கு நல்லறமேயாதலன்றிக் குற்றமா தலுண்டோ காண்? என்க.
 
(விளக்கம்) நின்னை நின் சேவல் காத்தல் போன்று யான்
  என் காதலியைக் காவாதொழிந்தேனே! என்று கழிவிரக்கங் கொள்வான்,
  போத்து அச்சங்காப்ப நடை கற்கும் பேடாய்! என்று விளித்தான்.
  பணிவரை-தாழ் வரை. மணி-நீலமணி-அரும் பெறல் மணி என மாற்றுக,
  அரும்பெறற் போத் தெனினும் ஆம். மத-இளமை. மயர்வனள்-மயங்கி ;
  முற்றெச்சம், விளிந்த - இறந்த. வஞ்சி மருங்குல் - வாசவதத்தை. மதி -
  கூர்த்த அறிவு என்பது பட நின்றது. குற்றம் உண்டோ என்பது - 
  அறமாதலன்றிக் குற்றம் ஆதலும் உண்டோ  என்பது படநின்றது.