பக்கம் எண் :

பக்கம் எண்:211

உரை
 
3. மகத காண்டம்
 
14. நலனாராய்ச்சி
 
         
           வித்தக ரெழுதிய சித்திரக் கொடியின்
           மொய்த்தலர் தாரோன் வைத்துநனி நோக்கிக்
           கொடியின் வகையுங் கொடுந்தாண் மறியும்
     100    வடிவமை பார்வை வகுத்த வண்ணமும்
           திருத்தகை யண்ணல் விரித்துநன் குணர்தலின்
           மெய்பெறு விசேடம் வியந்தன னிருப்பக்
 
        (உதயணன் சித்திரத்தைக் கண்டு வியத்தல்)
             97-102: வித்தகர் ......... இருப்ப
 
(பொழிப்புரை) அந்த அறையின்கண் ஓவியத்துறை கைபோகிய
  புலவர்கள் வரைந்த ஓவியமாகிய பூங்கொடியின்கண் உதயணன் தன்
  கருத்தை வைத்துக் கூர்ந்து நோக்கி அக்கொடியின் வகைகளையும்
  வளைந்த கால்களையுடைய மான் குட்டியையும் அதன் அழகமைந்த
  பார்வையினையும் அவ்வோவியப் புலவர்கள் வகுத்து வரைந்துள்ள
  தன்மையையும் ஆழ்ந்து நன்கு உணர்தலானே அவ்வோவியம் உண்மைப்
  பொருள்கள் போன்று தோன்றுகின்ற சிறப்பினை நோக்கிப் பெரிதும்
  வியந்தவனாய் வாளாவிருப்ப; என்க,
 
(விளக்கம்) வித்தகர் - ஓவியப் புலவர். சித்திரக் கொடி-ஓவியத்தி
  லெழுதப்பட்ட பூங்கொடி. மொய்த்து- செறிந்து; தன் மனத்தை வைத்து
  என்க. நனி நோக்கி,-கூர்ந்து நோக்கி. மறி-மான்
  குட்டி, அண்ணல்-உதயணன். மெய்ப்பெறு விசேடம் -உண்மைபோலத்
  தோற்றும் சிறப்பு.