பக்கம் எண் :

பக்கம் எண்:217

உரை
 
3. மகத காண்டம்
 
14. நலனாராய்ச்சி
 
         
          
          
           கரும்பேர் கிளவி கதிர்முகை முறுவற்
           பெருந்தடங் கண்ணி பிழைப்பொன் றுணரேன்
           வருந்தல் வேண்டா வாழிய நங்கையென்
     135    றிரந்தன னாகி யேற்பக் காட்டிய
           இலம்புடை நறுமல ரெழுதுகொடிக் கம்மத்துச்  
           சிலம்பிடைத் தங்கிய சேவடி யரத்தம்
           காரிருங் குஞ்சி கவின்பெறத் திவள
           அரவுவாய்க் கிடப்பினு மலர்கதிர்த் தண்மதிக்
     140    குருவுக்கதிர் வெப்ப மொன்று மில்லை
 
        (உதயணன் பதுமாபதியின் ஊடலைத் தீர்த்தல்)
           132-140; கரும்பு .,....... இல்லை
 
(பொழிப்புரை) அதுகண்ட உதயணன், கரும்பு போன்று
  இனிய மொழிபேசும் நங்காய்! ஒளியுடைய முல்லை முகை
  போன்ற பற்களையுடைய பாவாய்! பெரிய அகன்ற
  கண்களையுடையோய்! யான் நின் திறத்திலே பிழையேதுஞ்
  செய்திலேனே! அங்ஙனமிருப்பவும் நீ முகமாறி வருந்துவானேன்?
  வருந்தல் வேண்டா என்று இன்மொழி பல பேசி இரப்பானாய்த்தான்
  தன்னைத் தூயன் என்றுணர்த்தற் பொருட்டுத் தூங்குகின்ற நறிய
  மலர்களோடு பொறிக்கப்பட்ட பூங்கொடியுருவத்தையுடைய
  தொழிற்றிறனமைந்த சிலம்புகள் தங்கிய அவளது சிவந்த அடிகளிலே
  ஊட்டப்பட்டுள்ள அலத்தகக் குழம்பு தனது கரிய தலை மயிரின்கண்
  தோய்ந்து அழகுற்று விளங்கும்படி அவளுடைய அடிகளிலே விழுந்து,
  ''கோமகளே! குளிர்ந்த விரிந்த ஒளியையுடைய திங்கள் மண்டிலம்
  பாம்பின் வாயில் அகப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுதும் அதன்கண்
  ஊடுருவிச் செல்லுகின்ற வெப்பமுடைய கதிர் சிறிதுமில்லை,'' என்க.
 
(விளக்கம்) ஏர்-உவம உருபு. கிளவி-விளி. முகை-அரும்பு
  முறுவல்-பல். நகைப்புமாம், கன்னி;விளி, பிழைப்பு-தவறு நங்கை.
  விளி. ஊடல் தீர்க்க வேண்டுதலின் இவ்வாறு மும்முறை இனிதின்
  விளிக்கின்றான். காட்டிய - காட்ட; செய்யிய என்னும் வாய்ப்பாட்டு
  வினையெச்சம். இலம்புடை - தொங்குதலையுடைய.
  அரத்தம்-செம்பஞ்சுக் குழம்பு. கவின்-அழகு. திவள-விளங்க.
  அரவு-பாம்பு. உருவுக்கதிர்-ஊடுருவிச் செல்லும் கதிர். ஒன்றும்
  இல்லை-சிறிதும் இல்லை.