பக்கம் எண் :

பக்கம் எண்:219

உரை
 
3. மகத காண்டம்
 
14. நலனாராய்ச்சி
 
         
          
          
           மாடத் தகத்தி லாடுவினைக் காவினுட்
           கொம்பர் மீமிசைக் கூகைவந் துலாஅய்
           வித்தகக் கைவினைச் சத்தி யேறி
           உட்குத்தக வுரைத்தலுங் கட்கின் பாவை
     155    நெஞ்சந் துட்கென நெடுவிடை நின்ற
           காற்றெறி வாழையி னாற்ற நடுங்கி
           அஞ்சி லோதி யாகத் தசைத்தர
 
          (பதுமாபதி ஊடல் தீர்தல்)
          151-157 : மாட.........அசைத்தர
 
(பொழிப்புரை) அப்பொழுது அவர்கள் இருந்த மாடத்தின் 
  உச்சியில் அமைத்துள்ள கலைத்திறம் அமைய இயற்றப்பட்ட 
  சூலத்தின்மேல் அயலில் விளையாட்டயரும் சோலையின்கண்
  மரக்கொம்பின்மீது இருந்த கூகை ஒன்று ஏறிக் கேட்போர்க்கு
  அச்சம் உண்டாகும்படி குழறா நிற்ப, அதுகேட்ட காண்டற்கினிய
  பாவை போல்வாளாகிய பதுமாபதி அச்சத்தால் நெஞ்சம்
  திடுக்குற்று நெடிய வெளியின்கண் நின்ற வாழைமரம் சூறைக்
  காற்று  வீசும் பொழுது நடுங்குதல் போன்று பெரிதும் நடுங்கி
  அழகிய சிலவாகிய கூந்தலையுடைய அந் நங்கை உதயணனது
  மார்போடு பொருந்தி அவனைக் கட்டிக்கொள்ள, என்க.
 
(விளக்கம்) ஆடுவினைக்கா-விளையாடுதற்குரிய சோலை.
  கொம்பர்-கொம்பு. உலாய்-சுற்றி, சத்தி-சூலம். உட்கு-அச்சம்.
  கட்கின்பாவை-கண்ணுக்கு -இனிதாகிய பாவைபோல்வாளாகிய
  பதுமாபதி. துட்கென-திடுக்கென. நெடுவிடை-நெடிய வெட்ட
  வெளி.. ஆகம்-உதயணன் மார்பு. அசைத்தர - கட்டிக்கொள்ள,