பக்கம் எண் :

பக்கம் எண்:22

உரை
 
3. மகத காண்டம்
 
1. யாத்திரை போகியது
 
         
     160    வெஞ்சுரஞ் செல்வோர் வினைவழி யஞ்சப்
           பஞ்சுர வோசையிற் பையெனப் பயிரும்
           வெண்சிறைச் செங்கா னுண்பொறிப் புறவே
           நுண்சிறு மருங்கு னுகர்வின் சாயற்
           பாசப் பாண்டிற் பல்கா ழல்குலென்
     165    வாசவ தத்தை யுள்வழி யறியின்
           ஆசை தீர வவ்வழி யடைகேன்
           உணரக் கூறா யாயிற் பெடையொடு
           புணர்வு விரும்பல் பொல்லா தெனவும்
 
                 (ஆண் புறா)
          160 - 168 ; வெஞ்சுரம்............எனவும்
 
(பொழிப்புரை) வெவ்விய பாலைவழியிலே செல்லுபவர்
  தாம்மேற்கொண்ட செயலைச் செய்தற்கு அஞ்சி மீள நினையும்படி
  'பஞ்சுரம்' என்னும் இரக்கந் தோற்றுவிக்கும் பாலைப பண்ணினது
  இசையுண்டாகப் 'பை' என்று கூவா நின்ற வெள்ளிய சிறகுகளையும்
  சிவந்த கால்களையும் நுண்ணிய புள்ளிகளையும் உடைய  புறவே !
  புறவே,! நுண்ணிய சிறிய இடையினையும், ஐம்பொறிகளானும்
  நுகர்தற்கினிய மென்மையினையும் உடையவளும், பொற் சரட்டில்
  கோத்த வட்டமாகிய பொற்காசுகளையுடைய பலவாகிய  கோவையினை
  யுடைய அல்குலினையும் உடையவளும் ஆகிய என்காதலி வாசவதத்தை
  நல்லாள் மாறிப் பிறந்திருக்குமிடத்தை இப்பொழுது யான் அறிவேனாயின்
  என் ஆசை தீரும்படி அவ்விடத்தை யான் அடைவேன் காண்!
  அவளிருக்குமிடத்தையறியாத யான் அறியும்படி நீ எனக்குக் கூறுக!
  கூறாயாயின் நீ நின் காதலியாகிய பெடைப் புறவோடு புணர்ந்தின்புறுதலை.
  விரும்புதல் பெரிதும் தீயதொரு வினையே யாகுங்காண்! ஆகவே கூறிவிடு!
  என்றும் என்க,
 
(விளக்கம்) வினை- தாம் மேற்கொண்ட பொருளீட்டல்
  முதலிய தொழில். பஞ்சுரம்-ஒரு பாலைப்பண், இப்பண் கேட்டோர்
  நெஞ்சத்தே இரங்கல் என்னும் மெய்ப்பாட்டைத் தோற்றுவிக்குமாதலின்
  அது கேட்போர் துணி விழந்து அஞ்சா நிற்பர் என்றவாறு. ''வெண்நிறச்
  செங்கா னுண்பொறிப். புறவு'' என்னும் சொல்லோவியம் ஆற்றவும்
  இனிதாதலுணர்க. ஈண்டுப் பொற் சரடு என்க. பாசம் - கயிறு ; பாண்டில்
  - வட்டக்காசு. யான் காதலியை யிழந்து கையறவு கோடலைக் கண்டு
  வைத்தும் என்துயர் தீர்க்க முயலாமல் நீ காதலின்பம் நுகர்வது தீவினை
  என்பான், பெடையொடு புணர்வு விரும்பல் பொல்லாதென்றான்,