உரை |
|
3. மகத காண்டம் |
|
14. நலனாராய்ச்சி |
|
குலத்தொடும்
வாராக் கோறரும் விச்சை 210
நலத்தகு மடவோய் நாடினை
யாகின்
அலைத்தல் கற்றல் குறித்தேன்
யானென
மற்போர் மார்பவிது கற்கல்
வேண்டா
வலியி னாவது வாழ்கநின்
கண்ணி
தரித்தர லின்றிய விவற்றை யிவ்விடத்
215 திருத்த லல்லது வேண்டலம் யாமென |
|
(இதுவுமது) 209-215;
குலத்தொடும்.........யாமென |
|
(பொழிப்புரை) அதுகேட்ட உதயணன்
அழகுடைய அரிவையே! என்னுடைய குலத்தோடும் பொருந்தி வருதலில்லாத நரம்பு
தருகின்ற இந்த யாழினது வித்தையை நீ ஆராய்தலுண்டெனின் அதன்
பொருட்டு என்னை வருத்தாதே கொள்! யானும் இந்த வித்தையை இனி
நும்மிடமே கற்கக் கருதியுள்ளேன்'' என்றுகூற அதுகேட்ட தோழி''
''மற்போரில் ஆற்றல்மிக்க மார்பையுடைய பெருமானே.! இச் செயல் கற்றுச்
செய்வதொன்றில்லை. இஃது வலிமையால் செய்யற்பால தொன்றாம். வாழ்க
நின் கண்ணி! தனக்குரிய இடத்தே நிற்றலில்லாத இவ் வார்க்கட்டினை
இவ்விடத்திலேயே விட்டு வைப்பதல்லது இந்த யாழினை இனி
யாங்கள் விரும்புதலும் இலம்,'' என்று வெறுப்புடன் கூற; என்க, |
|
(விளக்கம்) உதயணன்
தன்னைப் பார்ப்பனனாகக் காட்டி யாழ் வித்தை எங்குலத்திற்கு ஒத்ததன்று
என்று கூறுகின்றான். கோல்தரும் வித்தை-நரம்பு தருகின்ற இசைக்கலை.
அலைத்தல்-வருத்தாதே. யானும் நும்பால் இனி இவ் வித்தையைக் கற்கக்
கருதியிருக்கின்றேன் என்றவாறு. கற்றல் வேண்டா, வலியினாவது என்றது, இவ்
வார்க்கட்டினை ஏற்றி நிறுத்துதற்கு யாழ் கற்றிருத்தல் வேண்டா;
வலியுடையோர் யாரேயாயினும் செய்தல் கூடும் என்றபடி. அவன் மனம்
வருந்துகின்றான் என்று உட்கொண்டு 'வாழ்க நின் கண்ணி!' என்று
வாழ்த்தினாள். இதனை ஏற்றித் தாராயாயின் இந்த யாழினை யாங்கள்
வாளாபோகட்டு விடுகின்றோம், என்பாள், வேண்டலம் யாம் என்றாள்; இது
பிணங்கிக் கூறியபடியாம். |