பக்கம் எண் :

பக்கம் எண்:230

உரை
 
3. மகத காண்டம்
 
14. நலனாராய்ச்சி
 
         
           அன்ன தாயி னாமெனிற் காண்கம்
           பொன்னிழை மாதர் தாவெனக் கொண்டு
           திண்ணிய வாகத் திவவுநிலை நிறீஇப்
           பண்ணறி வுறுத்தற்குப் பையெனத் தீண்டிச்
    220    சுவைப்பட நின்றமை யறிந்தே பொருக்கெனப்
           பகைநரம் பெறிந்து மிகையுறப் படூவும்
           எள்ளற் குறிப்பினை யுள்ளகத் தடக்கிக்
 
          (இதுவுமது)
     216-222 ; அன்னதாயின்........அடக்கி
 
(பொழிப்புரை) அதுகேட்ட உதயணகுமரன், ''அப்படியாயின் எம்மால்
  இயலுமேல் ஏற்றிப் பார்ப்போம். பொன்னணிகலன் அணிந்த நங்கையே
  அதனை என் கையிற்கொடு'' என்று கூறி ஏற்றுக்கொண்டு எளிதாகவே
  திவவினை ஏற்றித்திட்பமாக அதற்குரிய இடத்திலே நிறுத்தி வைத்த
  பின்னர் அதன் இசையினை யாப்பியாயினிக்கு அறிவுறுத்தற்பொருட்டு
  நரம்பினை மெல்ல வருடிப் பார்த்து அது சுவையுண்டாக நின்றமையை
  உணர்ந்துகொண்டு பின்னர் ஞெரேலென்று அதன் பகை நரம்பினை
  வருடி அதுதானும் மிகைபட ஒலித்தலால் தன் உள்ளத்தே எழும் இகழ்ச்சிக்
  குறிப்பினை வெளிப்படுத்தாது அடக்கிக் கொண்டென்க,
 
(விளக்கம்) காண்கம்-காண்பேம். மாதர்-விளி, தீண்டி-வருடி.
  சுவை-இசை யின்பம், பொருக்கென-விரைவுக் குறிப்பு. பகை
  நரம்பு -ஆறாம் நரம்பும் மூன்றாம் நரம்பும் என்னை? ,''நின்ற
  நரம்பிற்காறும் மூன்றும் சென்று பெற நிற்பது கூடமாகும்''
  என்பவாகலின் கூடமெனினும் பகையெனினும் ஒக்கும்,
  (சிலப்-8;33-4.அடியார்க்கு நல்லார் உரை விளக்கம்) எள்ளற்
  குறிப்பு - அதனை இகழ்தற் குரிய குறிப்பு.