பக்கம் எண் :

பக்கம் எண்:232

உரை
 
3. மகத காண்டம்
 
14. நலனாராய்ச்சி
 
         
           நீட்டக் கொள்ளாண் மீட்டவ ளிறைஞ்சிக்
           கொண்ட வாறுமவன் கண்ட கருத்தும்
           பற்றிய வுடனவ னெற்றிய வாறும்
           அறியா தான்போன் மெல்ல மற்றதன்
   235     உறுநரம் பெறீஇ யுணர்ந்த வண்ணமும்
          செறிநரம் பிசைத்துச் சிதைத்த பெற்றியும்
          மாழை நோக்கி மனத்தே மதித்தவன்
          அகத்ததை யெல்லா முகத்தினி துணர்ந்து
 
          (இதுவுமது)
     231 - 238; மீட்டவள்.........உணர்ந்து
 
(பொழிப்புரை) மீண்டும் யாப்பியாயினி அவனை வணங்கியவளாய்த்
  தான் யாழினைக் கொடுக்கும்பொழுது அவன் அதனை ஏற்றுக்கொண்ட
  முறைமையினையும் அதனைப் பார்த்தமையால் அவன் உள்ளத்தில்
  தோன்றிய கருத்தினையும் திவவினை ஏற்றி அது நிலை பெற்றவுடன்
  அந்த யாழின் நரம்பினை அவன் வருடிய முறைமையினையும் தனக்கு
  யாழ் அறியாதனபோலக் காட்டி மெல்லப் பொருந்திய அதன் நரம்பினை
  இசையெழுப்பிச் செவியால் ஓர்ந்த முறைமையினையும் செறிந்த பகை
  நரம்பினை வருடி இசையினைச் சிதைத்த தன்மையையும் அழகிய
  நோக்கினையுடைய அத் தோழி தன் உள்ளத்தே நன்கு ஊகித்து அறிந்து
  கொண்டு அவ்வுதயணனுடைய உள்ளத்திலுள்ள அந்த யாழினைப் பற்றிய
  கருத்துக்களையும் அவன் முகத்திற்றோன்றிய மெய்ப்பாட்டினாலேயே நன்கு
  உணர்ந்து கொண்டு; என்க.
 
(விளக்கம்) அவள் - யாப்பியாயினி. பற்றியவுடன் - திவவு
  நிலை, பெற்ற உடன், உறு நரம்பு - பொருந்திய நரம்பு.. எறீஇ - எறிந்து.
  பெற்றி - தன்மை. மாழை - அழகு, அவன் - உதயணன்.
  அகத்ததையெல்லாம் முகத்தினி துணர்ந்து என்னும் இதனொடு,
  ''அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சங். கடுத்தது காட்டு முகம்''
  ''முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும், காயினுந் தான் முந்துறும்''
  எனவரும் குறள்களையும் நினைக.