பக்கம் எண் :

பக்கம் எண்:237

உரை
 
3. மகத காண்டம்
 
14. நலனாராய்ச்சி
 
         
           மறாஅ தருளென வுறாஅன் போல
           அலங்குகதிர் மண்டில மத்தஞ் சேரப்
           புலம்புமுந் துறுத்த புன்கண் மாலைக்
     260   கருவி வானங் கால்கிளர்ந் தெடுத்த
           பருவம் பொய்யாப் பைங்கொடி முல்லை
           வெண்போது கலந்த தண்கண் வாடை
           பிரிவருங் காதற்குக் கரியா வதுபோல்
           நுண்சா லேக நுழைந்துவந் தாட
 
          (மாலைக் காலம்)
         257 - 264; உறாஅன்போல.............ஆட
 
(பொழிப்புரை) அதுகேட்ட உதயணகுமரன் அவ் வேண்டுகோட்கு
  இணங்கா தான் போன்று சிறிதுபொழுது வாளாவிருந்தானாக; அப்பொழுது
  அசையா நின்ற ஒளிக்கற்றையையுடைய ஞாயிற்றுமண்டிலம் அத்தகிரியை
  அடையத் தனிமைத் துன்பத்தை முன்னிட்டு வருகின்ற அந்தி மாலைப்
  பொழுது வந்துற்றதாக; அம் மாலைப்பொழுதிலே மின் முதலிய
  தொகுதிகளையுடைய முகிலாலே நீரூட்டி ஊக்கத்தோடு வளர்க்கப்பட்ட
  தனக்குரிய கார்காலத்து அந்தி மாலையிலே மலர்தலைத் தவிராத
  பசியமுல்லைக் கொடியினது வெள்ளிய மலர் மணத்தை அளாவிக்கொண்டு
  குளிர்ந்த கண்ணோட்டமுடைய வாடைக் காற்று உலகின்கண் பிரிதலரிய
  சிறந்த காதலர் கூட்டுறவிற்குத் தான் ஒரு சான்றாவதே போன்று
  மாடந்தோறுமமைந்த நுண்ணிய தொழிற்பாடமைந்த சாளரந்தோறும் நுழைந்து
  இயங்கா நிற்ப வென்க.
 
(விளக்கம்) கதிர்மண்டிலம் - ஞாயிற்று மண்டிலம்.
  அத்தம் - அத்தகிரி. புலம்பு - தனிமைத் துயர். கருவி - மின்
  முதலிய தொகுதி வானம் - முகில். பருவம் - கார்ப்பருவம்,
  கரி - சான்று, ,பிரிந்த காதலரை வற்புறுத்திக் கூட்டுதலாலே
  தண்கண் வாடை யென்றார்