பக்கம் எண் :

பக்கம் எண்:238

உரை
 
3. மகத காண்டம்
 
14. நலனாராய்ச்சி
 
         
     265    ஆராக் காதலிற் பேரிசை கனியக்
           குரலோர்த்துத் தொடுத்த குருசி றழீஇ
           இசையோர் தேய வியக்கமும் பாட்டும்
           நசைவித் தாக வேண்டுதிர் நயக்கெனக்
 
        (உதயணன் பாடிக்கொண்டு யாழ் வாசித்தல்)
           265 - 268 ; ஆரா......................நயக்கென
 
(பொழிப்புரை) யாழின்பால் நுகர்ந்து நுகர்ந்து அமையாத
  காதலுடைமையாலே அந்த யாழினை ஆராய்ந்து தழீ இக்கொண்டு
  குரல் முதலாகவுள்ள  ஏழிசையினையும் எழீஇத் தனது எஃகுச்
  செவியாலாராய்ந்து தொடுத்த உதயணன் யாப்பியாயினியை நோக்கி
  ''அன்புடையீர்! நுமக்கு இசையின்பாலுள்ள அவாவே காரணமாக
  என்னைப் பாடுமாறு வேண்டுகின்றீர்! யானும் பாடுவல் கேட்கக் கடவீர்.!
  என்று கூறிக் கந்தருவ மார்க்கத்தாலே யாழினை வருடிக்கொண்டு
  மிடற்றாற் பேரிசை கனியும்படி பாடத் தொடங்கியவன் என்க.
 
(விளக்கம்) யாழின்பால் - தனக்குள்ள. ஆராக் காதலாலே என்க.
  குரல்-குரல் முதலிய ஏழிசையும் என்க குருசில்-உதயணன். இசையோர்
  தேயவியக்கம் - கந்தருவ மார்க்கம், அஃதாவது இடைமடக்கிவரும்
  ஒருவகை இசைப்பாட்டின் முறை - பாட்டு -மிடற்றுப்பாடல், நசை - அவா.
  நயக்க எனக் கண்ணழித்து நீயிர் கேண்மின் என்க. இளி நயக்கு எனக்
  கண்ணழித்து நும் வேண்டுகோளை யானும் நயப்பேன் என்று பொருள்
  கோடலுமாம்,