| பக்கம் எண்:239
|
|
| உரை | | | | 3. மகத காண்டம் | | | | 14. நலனாராய்ச்சி | | |
குன்றா வனப்பிற் கோட பதியினை
270 அன்றாண்டு நினைத்தஃ தகன்ற
பின்னர்
நலத்தகு பேரியாழ் நரம்புதொட்
டறியா
இலக்கணச் செவ்விர லேற்றியு
மிழித்தும்
தலைக்கட் டாழ்வு மிடைக்க
ணெகிழ்ச்சியும்
கடைக்கண் முடுக்குங் கலந்த கரணமும்
275 மிடறு நரம்பு மிடைதெரி
வின்றிப்
பறவை நிழலிற் பிறர்பழித்
தீயாச்
செவிச்சுவை யமிர்த மிசைத்தலின் மயங்கி | | |
(இதுவுமது) 269 - 277 ;
குன்றா,,,,,,,,,,,,.,,இசைத்தலின் | | | (பொழிப்புரை) குறையாத
அழகினையுடைய தனது தெய்வயாழாகிய கோடபதிபண்டு ஒருபாலை நிலத்திலே
வீழ்ந்தபொழுது இனி அதனைக் கைக்கொள்ளல் அரிதென நினைத்து அதனைக்
கைவிட்டுப் பிரிந்த பின்னர் இசை நலத்தாற் றகுதிபெற்ற
எந்தப்பேரியாழினது நரம்பையும் தொட்டறியாதனவும்
நல்லிலக்கணமுடையனவுமாகிய தனது சிவந்த விரல்களாலே அற்றை நாள் அந்த
யாழினை வருடி ஆரோசைப்படுத்தும் அமரோசைப்படுத்தும் தொடக்கத்தே
மந்தமாகவும் இடையிலே சமமாகவும் இறுதியிலே முடுக்காகவும் மூன்றுவகை நடையும்
கலந்த இசைக்கரணத்தானும் குறைவின்றித் தனது மிடற்றுப் பாடலுக்கும் அந்த
நரம்பிசைக்கும் வேற்றுமை சிறிதுமின்றிப் பறவையும் அதன் நிழலும்
போல இயைந்தியங்கிப் பிறர் பழித்தலில்லாத செவிச் சுவையமிழ்தமாகிய
பண்ணினை இசைத்தலானே, என்க. | | | (விளக்கம்) கோடபதி-உதயணனுக்கு ஆசிரியர் வழங்கிய ஒரு தெய்வப் பேரியாழ். அன்று -
அது யானையினின்றும் வீழ்ந்து மறைந்த அந்த நாள் என்க, ஆண்டு - அப் பாலை
நிலத்தே. வேறு பேரியாழ் நரம்பு தொட்டறியாத விரல் என்க. ஏற்றுதல் -
ஆரோசையாக இசைத்தல். இழித்தல் - அமரோசையாகப் பாடுதல், இவற்றை
ஆரோகணம் அவரோகணம் என்றும் வழங்குப, தாழ்வு நெகிழ்ச்சி முடுக்கு
என்பன, வலிவு மெலிவு சமம் என்றும் கூறுப. மந்தம்- மத்திமம் தாரம்
எனினுமாம். கரணம்-இசைக் கரணம். மிடறு- மிடற்றோசை,
நரம்பு-நரம்போசை. பறவை நிழலில் - பருந்தும் அதன் நிழலும்போல, ''பருந்து
நிழலும்போற் பாட்டுமெழாலும் திருந்து தார்ச் சீவகற்கே சேர்ந்தன'.
(சீவக-730) என்பதுங் காண்க. பழித்தீயா -பழியாத, செவிச் சுவை
யமிர்தம் - என்றது இசையை. |
|
|