பக்கம் எண் :

பக்கம் எண்:240

உரை
 
3. மகத காண்டம்
 
14. நலனாராய்ச்சி
 
         
            மாடக் கொடுமுடி மழலையம் புறவும்
            ஆடமை பயிரு மன்னமுங் கிளியும்
     280    பிறவு மின்னன பறவையும் பறவா
            ஆடுசிற கொடுக்கி மாடஞ் சோரக்
            கொய்ம்மலர்க் காவிற் குறிஞ்சி முதலாப்
            பன்மர மெல்லாம் பணிந்தன குரங்க
            மைம்மலர்க் கண்ணியு மகிழ்ந்து மெய்ம்மறப்ப
 
         (உதயணனுடைய இசையின் சிறப்பு)
            277 - 284 : மயங்கி.............மறப்ப
 
(பொழிப்புரை) அவ்விசை கேட்டு மாடங்களின் உச்சியிலிருந்த
  இனிதாகக் கூவும் புறாக்களும் கூத்தாடுதல் பொருந்திய பயிரும்
  அன்னமும் கிளியும் இவைபோல்வனவாகிய பிற பறவைகளும்,
  இவ்விசையின்பத்தில் மயங்கிப் பறவாவாய் அசையும் தத்தம்
  சிறகுகளை ஒடுக்கிக்கொண்டு அம் மாடங்களிலேயே மெய்ம்மறந்து
  சோராநிற்ப, இனி, கொய்தற்குரிய மலரையுடைய பொழிலின்கண்
  உள்ள குறிஞ்சி முதலிய பல்வேறு மரங்களும் இவ்விசை
  கேட்டுத்தாழ்ந்தனவாய் வளையா நிற்பவும் மையூட்டப் பெற்ற
  மலர்போன்ற கண்ணையுடைய பதுமாபதி இத்தகைய இசையைக்
  கேட்டுப் பெரிதும் மகிழ்ந்து மெய்ம் மறந்து; என்க.
 
(விளக்கம்) மழலை - இனிமை; ஆடமை. பயிர் - கூத்தாடுதல்
பொருந்திய பயிர் என்னும் ஒருவகைப் பறவை. குரங்க - வளைய
கண்ணி - பதுமாபதி.