பக்கம் எண் :

பக்கம் எண்:241

உரை
 
3. மகத காண்டம்
 
14. நலனாராய்ச்சி
 
         
     285    ஏனோர்க் கிசைப்பி னேதந் தருமென
            மானேர் நோக்கி மனத்திற் கொண்டு
            கண்கவர் வுறூஉங் காமனிற் பின்னைத்
            தும்புரு வாகுமித் துறைமுறை பயின்றோன்
            இவனிற் பின்னை நயனுணர் கேள்வி
     290    வகையமை நறுந்தார் வத்தவர் பெருமகன்
            உதயணன் வல்லனென் றுரைப்ப வவனினும்
            மிகநனி வல்லனித் தகைமலி மார்பனென்
 
        (பதுமாபதி வியத்தல் முதலியன)
        285 - 292; ஏனோர்,,,,,,,,,,,,,மார்பனென்று
 
(பொழிப்புரை) இந்நிகழ்ச்சியினை மற்றையோர்க்குக் கூறுவேமாயின்
  மறை வெளிப்பட்டுத் துயரமுண்டாகும் என்று மான்போலும் பார்வையையுடைய
  அப் பதுமாபதி அவ்வின்பத்தைத் தன் நெஞ்சில் அடக்கிக் கொண்டவளாய்
  அம்மம்ம என்னே ! இவன் கலைத் திறம் இருந்தவாறு! காண்போர் கண்ணைக்
  கவர்கின்ற அழகுடைய காமவேளே யாழ் வித்தையில் தலைசிறந்தவன் என்பர்.
  அக் காமவேளுக்குப் பின்னர்த் தும்புரு சிறந்தோன் என்பர். இத் துன்புரு.
  முனிவனுக்குப் பின்னர் இவ்வியாழ் வித்தையை முறையாகப் பயின்றவனும் இசை
  நயம் உணர்ந்தவனும் கேள்வி யறிவு பொருந்தியவனும் நறிய மலர் மாலை
  யணிந்தவனும் வத்தவ நாட்டு மன்னவனும் ஆகிய உதயணன் இசையிற் பெரிதும்
  வல்லவன் ஆவன் என்று கூறுவார்கள். அவ்வுதயணனினும் பெரிதும் வல்லவனாகக்
  காணப்படுகின்றான் என் காதலனாகிய அழகுமிக்க மார்பையுடைய இப் பார்ப்பன
  மகன் என்று நினையுந்தோறும், என்க.
 
(விளக்கம்) ஏனோர் - ஏனையோர்; மற்றவர். இம் மகிழ்ச்சிச்
  செய்தியை மற்றவர்க்குக் கூறி மகிழ்ந்தால் நம்முடைய மறை வெளிப்படும்
  என்பாள் ஏதம் தரும் என்றாள். நோக்கி-பதுமாபதி. யாழ்வித்தையில் ஒப்பற்ற
  வன்மையுடையவன் காமன். அவனை யடுத்துத் தும்புரு முனிவன். அவனை
  யடுத்து உதயணன் வல்லவன். இம்மூவரினும் உயர்ந்தவன் என் காதலன்
  என்று மகிழ்ந்தபடியாம். தகை -அழகு,