பக்கம் எண் :

பக்கம் எண்:243

உரை
 
3. மகத காண்டம்
 
15. யாழ்நலந் தெரிந்தது
 
            மறையோம் பொழுக்கின் மதலை கேண்மதி
           நிறையோம் பொழுக்கி னின்னல முணரேம்
           ஒருபே ருலகம் படைத்த பெரியோன்
           உருவுகரந் தொழுக லுணரா ராகக்
 
               (யாப்பியாயினியின் செயல்)
                 1 - 4 ; மறை,,.,,.,,,ஆக்
 
(பொழிப்புரை) இனி உதயணனுடைய இன்னிசைச் சிறப்புணர்ந்த
  பின்னர் ஒருநாள் உதயணனை நோக்கி மறை பயின்று அந்நெறியிலே
  ஒழுகும் பார்ப்பனச் சான்றோனே கேட்டருள்க, ஒப்பற்ற
  இப்பேருலகத்தைப் படைத்த கடவுளாகிய நான்முகன் தன்னை உலகத்தார்
  உணராதபடி தனது உருவத்தை மறைத்துக்கொண்டு ஒழுகுதல் போன்று நீ
  தானும் நின்னை எம்மனோர் உணர்ந்து கொள்ளாதபடி பெரிதும்
  அடக்கமுடையையாய் ஒழுகுதலாலே உன்னுடைய சிறப்பினை யாங்கள்
  உணரேம் ஆயினேம் என்றாள் ; என்க.
 
(விளக்கம்)  மறை - வேதம். மறையோம் பொழுக்கின் மதலை - விளி,
  பார்ப்பனப் பிள்ளாய் என விளித்தவாறு. கேண்மதியென்புழி, மதி முன்னிலையசை
  நிறை-மனத்தை நிறுத்தும் ஆற்றல். நிறையோம் பொழுக்கம்-நெஞ்சம் பொறிகளின்
  வழியாய்ப் புலன்களிற் செல்லாமல் அடக்கி ஒழுகும் ஒழுக்கம். உலகம்படைத்த
  பெரியோன்; நான்முகன்.